நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிக்கு கத்தி குத்து.. ஊழியர் அதிரடியாக பணியிடை நீக்கம்..!

By vinoth kumarFirst Published Mar 2, 2022, 12:50 PM IST
Highlights

சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக பொன்பாண்டியனை என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவரது அலுவலக உதவியாளராக பிரகாஷ் என்பவர் உள்ளார்.

சேலத்தில் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி பொன்பாண்டியனை கத்தியால் குத்திய ஊழியர் பிரகாஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக பொன்பாண்டியனை என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவரது அலுவலக உதவியாளராக பிரகாஷ் என்பவர் உள்ளார்.

அண்மையில் பிரகாஷ் வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தெரிகிறது. அவரது பணியிட மாற்றத்திற்கு நீதிபதி பொன்பாண்டியன் தான் காரணம் என பிரகாஷ் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை நீதிமன்ற வளாகத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நீதிபதி பொன்பாண்டியனின் மார்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தினார். இதனால், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் உடனடியாக பிரகாஷ் என்பவரை கைது செய்தனர். காயமடைந்த நீதிபதியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து, மாவட்ட தலைமை நீதிபதி மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில், இன்று நீதிபதியை தாக்கிய ஊழியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுருபரன் உத்தரவிட்டார்.

click me!