செம்மரத்தை கடத்த முயன்ற போது போலீசாரிடம் இருந்து தப்புவதற்காக காரை வேகமாக ஓட்டிய போது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
செம்மரத்தை கடத்த முயன்ற போது போலீசாரிடம் இருந்து தப்புவதற்காக காரை வேகமாக ஓட்டிய போது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பதி அடுத்த ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை பகுதியில் செம்மரக்கட்டைகள் கடத்துவதும் தமிழகர்கள் கைது செய்யப்படுவதும் தொடர்கதையாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், கடப்பா அருகே இன்று அதிகாலை டிப்பர் லாரி ஒன்றின் மீது செம்மர கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் டீசல் டேங்க் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் டிப்பர் லாரி, இரண்டு கார்கள் ஆகியவை முற்றிலுமாக எரிந்தன.
ஒரு காரில் பயணம் செய்த 4 பேர் காரில் இருந்தபடியே எரிந்து சாம்பலாகினர். மற்றொரு காரில் இருந்த 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உயிரிழந்த 4 பேரும் சேலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. செம்மரக்கடத்தல் கும்பல் கடப்பா மாவட்டத்தில் உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி காரில் ஏற்றி வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் தங்கள் வாகனத்தில் கடத்தல் கும்பலை விரட்டி சென்றுள்ளனர். போலீசாரிடம் இருந்து தப்புவதற்காக கடத்தல் கும்பல் இரண்டு கார்களையும் வேகமாக ஓட்டி சென்றுள்ளனர். அப்போது, இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தரப்பில் கூறியுள்ளனர்.