சேலத்தில் வடமாநில தொழிலாளர்களிடம் கட்டிட வேலைகளை வாங்கிக்கொண்டு, சம்பளம் தராமல் கொலை மிரட்டல் விடுவதாகக் கூறி, வடமாநில தொழிலாளர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வினோத்குமார், ராஜேஷ் உள்பட 20க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து தமிழகத்திற்கு வந்து கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக புதிதாக கட்டப்படும் வீடுகளில் மரம் தொடர்பான வேலைகள், டைல்ஸ் ஓட்டுவது போன்ற பணிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சேலம் பாகல்பட்டி பகுதியை சேர்ந்த அருண்குமார் என்ற கட்டிட பொறியாளர் சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் புதிய வீட்டு கட்டுமானப் பணிகளை எடுத்து செய்து வருகிறார்.
இவரது ஓப்பந்தப் பணிகளுக்கு வடமாநில தொழிலாளர்களான வினோத்குமார், ராஜேஷ் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டவர்களை கடந்த ஆறு மாதங்களாக பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டு வேலைகள் முடிந்தவுடன் சம்பளத்தை கொடுக்குமாறு வடமாநில தொழிலாளர்கள் கேட்டுள்ளனர். அப்போது பணத்தை தர மறுத்ததுடன், வட மாநிலத்தவர்களை ஊருக்குள் விட்டதே தவறு என்று கூறி, தகாத வார்த்தைகளால் திட்டியதாக புகார் மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்து இருக்கும் புகார் மனுவில் வடமாநில தொழிலாளர்கள் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தங்களுக்கு சேர வேண்டிய சம்பளத்தை பெற்றுத் தர வேண்டும் என்றும் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.