'3 ஆயிரம் லஞ்சம் கொடு'..! திருமண உதவித்தொகைக்கு விண்ணப்பித்த ஏழைப்பெண்ணிடம் மல்லுகட்டிய அதிகாரி..!

By Manikandan S R SFirst Published Dec 12, 2019, 2:50 PM IST
Highlights

திருமண உதவித்தொகைக்காக விண்ணப்பித்த ஏழைப்பெண்ணிடம் 3 ஆயிரம் லஞ்சம் கேட்ட அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே இருக்கும் சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். விவசாயியான இவருக்கு பிரியா என்கிற மகள் உள்ளார். அவருக்கு கடந்த 1ம் தேதி திருமணம் நடந்துள்ளது. இதற்காக மூவலூர் ராமாமிர்த அம்மையார் நினைவு திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்காக வெங்கடேசன் விண்ணப்பித்திருந்தார். ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு 25 ஆயிரம் பணமும் அரை பவுன் தங்கமும் இத்திட்டத்தில் வழங்கப்படும்.

உதவித்தொகை பெறுவது குறித்து தலைவாசல் ஊராட்சி அலுவலகத்தில் வெங்கடேசனின் அக்காள் மகன் கார்த்திக்குடன் பிரியா நேரில் சென்று விசாரித்துள்ளார். அப்போது மாவட்ட சமூக நலத்துறையில் பரிந்துரை செய்ய ஊராட்சி அலுவலர் கீதா(56) 3 ஆயிரம் லட்சம் கேட்டுள்ளார். முதலில் மறுத்த கார்த்திக், பின்னர் வீட்டில் போய் பணம் எடுத்து வருவதாக சென்றுள்ளார். வெளியே வந்த அவர் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த அதிகாரிகள், கார்த்திக்கிடம் ரசாயனம் தடவிய 3 ஆயிரம் பணத்தை கொடுத்தனர்.

அதை அவர் கீதாவிடம் கொடுத்துள்ளார். அப்போது  மாறுவேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கீதாவை மடக்கி பிடித்து அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அலுவலகத்தினுள் அவரை அழைத்து சென்று ஆவணங்களை சரி பார்த்து விசாரணை மேற்கொண்டனர். கீதா மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.

திருமண உதவித்தொகைக்காக விண்ணப்பித்த ஏழைப்பெண்ணிடம் 3 ஆயிரம் லஞ்சம் கேட்ட அதிகாரியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

click me!