மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை 100 வறண்ட ஏரிகளுக்கு எடுத்துச் சென்று நிரப்பும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் முழு கொள்ளளவை எட்டிய பின்னர், திறந்து விடப்படும் உபரி நீரான சுமார் 164 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இப்படி வீணாக கடலில் கலக்கும் நீரை பயனுள்ளதாக மாற்றும் வகையில் மேட்டூர் அணையின் உபரி நீரை 100 வறண்ட ஏரிகளில் நிரப்பும் திட்டத்திற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 4ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
இந்த திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.565 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் போது, அதன் இடது கரையில் இருந்து உபரி நீர் கால்வாய்கள் மூலம் திப்பம்பட்டி நீரேற்றும் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும். அங்கிருந்து 940 குதிரை திறன் கொண்ட 10 மின் மோட்டார்கள் மூலமாக நீரேற்றம் செய்து விநாடிக்கு 126 கன அடி வீதம் 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எம்.காளிப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும். அங்கிருந்து 23 ஏரிகளுக்கு நீர் நிரப்பப்படும்.
அதேபோல் வெள்ளாளபுரம் ஏரியில் அமைக்கப்பட்டுள்ள துணை நீரேற்றும் நிலையத்தில் இருந்து 640 குதிரைத்திறன் கொண்ட 4 மின் மோட்டார்கள் மூலமாக 5.50 கிலோ மீட்டர் தொலைவில் வடுகப்பட்டி அருகே அமைக்கப்பட்டுள்ல கீழ்நிலை நீர்த்தொட்டிக்கு விநாடிக்கு 88 கன அடி நீர் வீதம் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து 14 ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும். எடப்பாடி, சேலம், ஓமலூர், சங்ககிரி என 4 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 100 ஏரிகளில் நிரப்ப்படும் நீரால் 4 ஆயிரத்து 238 ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பயன் பெற உள்ளன.
திப்பம்பட்டியில் பிரம்மாண்ட நீரேற்றும் நிலையங்கள் அமைக்கப்பட்ட நிலையில், இன்று இந்த திட்டத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். திப்பம்பட்டியில் நடந்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் 62 கோடியே 63 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் 5 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டிலான 23 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் சேலம் ஆட்சியர் ராமன், எம்.பி.சந்திரசேகரன், மேட்டூம் எம்.எல்.ஏ. செம்ம்லை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.