
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. பயிர் கடன்கள் தள்ளுபடி, இலவச மும்முனை மின்சாரம், 10 மாவட்ட தலைநகரங்களில் பிரம்மாண்ட சந்தைகள் என விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை முதல்வர் பழனிசாமி அறிவித்து வருகிறார். அதிலும் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவை சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
தலைவாசல் அருகே ரூ.1000 கோடி மதிப்பீட்டில் மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் கல்லூரியை அமைக்க கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. சர்வதேச தரத்துடன் சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கால்நடை பூங்காவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
மூன்று பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் முதல் பிரிவில் கால்நடை பண்ணை வளாகமும், நவீன வசதிகளை கொண்ட கால்நடை மருத்துவமனை, கறவை மாட்டுப்பண்ணை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பிரிவில் மீன் மற்றும் முட்டை போன்ற உணவுப்பொருட்களை பதப்படுத்தி பாதுகாக்கவும், அதனை மதிப்பு கூட்டி, சந்தைப்படுத்தவும் தேவையான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மூன்றாவது தளத்தில் பயிற்சி, கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோருக்கான பயிலரங்கத்துடன் பல்வேறு அம்சங்கள் உள்ளன. இங்கு தமிழகத்தில் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் பயிற்சி மேற்கொள்ளவும், உலக நாடுகளில் கால்நடை மருத்துவம் பயிலும் மாணவர்கள் ஆராய்ச்சி மேற்கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
1,200 ஏக்கர் பரப்பளவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் கல்லூரியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். இதில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் ராமன், எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, வெற்றிவேல், மருதுமுத்து, வெங்கடாஜலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.