சேலத்தில் ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்குவதால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
கடந்த இரண்டு வாரங்களாக ஒரு கிலோ தக்காளி விலை 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்திருக்கிறது. ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், இதைச் சாதகமாக பயன்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறார் சேலத்தைத் சேர்ந்த ஒருவர்.
சேலம் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முகமது காசிம். இவர் அப்பகுதியில் ஹெல்மெட் விற்பனை செய்துவருகிறார். தக்காளி விலை உயர்ந்திருக்கும் நேரத்தில் தக்காளியை இலவசமாக தருவதாக விளம்பரம் செய்து ஹெல்மெட் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார்.
ஹெல்மெட் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ‘தலை கவசம் என்பது உயிர் கவசம்’, 'தலைக்கு ஹெல்மெட் முக்கியம், சமையலுக்கு தக்காளி முக்கியம்' என்று வாசகங்கள் கொண்ட பேனர்களை வைத்து விற்பனை செய்யும் காசிம், ஒரு ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளியை இலவசமாக வழங்கி வருகிறார்.
ஒரு ஹெல்மெட் ரூ.349 விலைக்குக் கொடுக்கிறார். அத்துடன் ஒரு கிலோ தக்காளியையும் இலவசமாக வழங்குகிறார். வெள்ளி, சனி இரண்டு நாட்களுக்கு மட்டும் தான் இந்தச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் பெஞ்சமின் முதலில் ஹெல்மெட் வாங்கி விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
சேலத்தில் தக்காளி 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் நிலையில், ஹெல்மெட் வாங்கினால் தக்காளி இலவசமாகக் கிடைப்பதால், பைக் ஓட்டும் பலரும் காசிம் கடைக்குச் சென்று பைக்குடன் தக்காளியும் வாங்கிச் செல்கின்றனர்.