அப்படி ஆலயம் எழுப்பினால் அனைவரும் அவர்களுக்கு ஓட்டு போடுவார்கள் என்று சொல்ல முடியாது என்றும் அதிமுக ஆட்சியில் தான் ஏராளமான ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டன என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
ஆலயம் கட்டிவிட்டால் மக்கள் தங்கள் பின்னால் வந்துவிடுவார்கள் என்று கருதுவது தவறான கருத்து என அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம், எடப்பாடி பயணியர் மாளிகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக ஆட்சியில் மக்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றி தரப்பட்டுள்ளன என்று கூறினார்.
undefined
"திமுக இளைஞரணி மாநாடு அவலங்கள் குறித்து ஒரு சில ஊடகங்கள்தான் காட்டின. திமுகவினர் எதிர்பார்த்த அளவுக்கு அந்த மாநாடு நடத்தப்படவில்லை. ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருவார்கள் என்றார்கள். ஆனால் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள்தான் வந்தனர். இருக்கைகள் காலியாக இருந்ததைப் பார்த்தோம்.
அதிமுக மாநாட்டில் உணவு பொருட்கள் சரியாக வழங்கவில்லை என குற்றம் சாட்டினர். அதிமுக மாநாட்டில் 15 லட்சம் பேர் கலந்து கொண்டனர். அங்கு வழங்கப்பட்ட உணவு குறித்து பத்திரிகைகள் விமர்சனம் செய்தன. அதே ஊடகங்கள் திமுக இளைஞரணி மாநாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் குறித்து விமர்சனம் செய்து காட்டவில்லை. சமூக வலைதளங்கள்தான் வெளிக்கொண்டுவந்துள்ளன" என அவர் குறிப்பிட்டார்.
அயோத்தி ராமர் சிலையைச் செதுக்க பயன்படுத்திய அபூர்வ கருங்கல்!
மேலும், சமூக வலைத்தளங்கள் மூலம் மக்கள் அனைத்தையும் பார்க்கின்றனர் என்று கூறிய அவர், பயம் காரணமாக பத்திரிகைகள் திமுகவின் அவலங்களைச் சுட்டிக்காட்டுவதில்லை என்றும் குறை கூறினார்.
"திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் ரத்து என்றார்கள். நீட் ரத்து ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று உதயநிதி ஸ்டாலின் சொன்னார். 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கியதாக கூறினார்கள். அந்த கையெழுத்து எல்லாம் மாநாட்டில் குப்பைக்கு சென்றுவிட்டது. லட்சக்கணக்கானோரிடம் கையெழுத்து வாங்கி குப்பையில் போட்டுள்ளனர். அப்படியென்றால் நீட் தேர்வு ரத்தில் இந்த அரசு எவ்வளவு அலட்சியமாக உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்" என ஈபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார்.
திமுக இளைஞரணி மாநாடு குறித்து தொடர்ந்து விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஒன்றுகூட மக்களுக்கு பயனுள்ளவை அல்ல. அனைத்துமே அவர்களின் புகழ் பாடும் தீர்மானங்கள்தான் என்று கூறினார். 2021 சட்டமன்ற தேர்தலில் 520 அறிவிப்புகள் வெளியிட்டார்கள். அதில் 100% நிறைவேற்றப்பட்டுள்ளதாகப் பச்சை பொய் பரப்பி வருகின்றனர் என்று எடப்பாடி பழனிசாமி சாடி இருக்கிறார்.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்துப் பேசிய அவர், "கூட்டணி என்பது சூழ்நிலைக்கு தக்கவாறு அமைக்கப்படும். அதிமுக சரியான வழியில் கூட்டணி அமைக்கும். நாளைய தினம் அதிமுக தலைமை அறிவித்த குழுவினர் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்குகின்றனர்" என்றார்.
வெவ்வேறு கருத்துக்கள் கொண்ட 26 கட்சிகள் கொண்ட கூட்டணி இந்தியா கூட்டணி. அவர்கள் ஒன்றாக இணைந்து செயல்படுவது கடினம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். "மேற்குவங்க முதல்வர் மம்தா கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் வந்துள்ளன. இன்னும் யார் யாரெல்லாம் வெளியேறப் போகிறார்கள் என்பதைப் பொருத்திருந்து பார்ப்போம்" எனவும் கூறினார்.
"அதிமுக ஆட்சியின் போது தமிழகத்திற்கு பேருந்துகள் வாங்குவதற்காக ஜெர்மன் நாட்டோடு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஆட்சியில் போக்குவரத்து மானிய கோரிக்கையில் 5000 பேருந்துகள் புதிதாக வாங்கப்படும் என்று மூன்று ஆண்டுகளாக திருப்பி திருப்பி சொல்லி வருகின்றனர். இதுவரை பேருந்துகள் வாங்கியதாகத் தெரியவில்லை. அதிமுக ஆட்சியில் 15 ஆயிரம் பேருந்துகள் வாங்கப்பட்டன. குறிப்பிட்ட காலம் வரைதான் பேருந்துகள் இயக்கப்படும். ஆனால், திமுக ஆட்சியில் அவற்றை எல்லாம் கூடுதல் காலம் இயக்கும் வகையில் மாற்றி அமைத்துள்ளனர். அதனால்தான் ஆங்காங்கே பேருந்துகள் பழுதாகி இயங்காமல் நிற்கின்றன" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"திறமையற்ற பொம்மை முதல்வர் ஆட்சியில் எந்த நிர்வாகமும் சரி இல்லை. திமுக ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்படும் என்று கூறினார்கள். இதுவரை எதுவுமே நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியின் போது 96 மாத கால நிலுவைத் தொகையில் 46 மாதங்கள் தருவதாக கூறினோம். அப்போது தொமுச தொழிற்சங்கம் நீதிமன்றம் சென்றனர். ஆறு சதவீத வட்டியுடன் திருப்பி தரவேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. அதையும் இவர்களால் நிறைவேற்ற முடியவில்லை.
ஒவ்வொரு மதத்தினரும் அவரவர்கள் விருப்பமுள்ள கோவிலை கட்டி வருகின்றனர். அப்படி ஆலயம் எழுப்பினால் அனைவரும் அவர்களுக்கு ஓட்டு போடுவார்கள் என்று சொல்ல முடியாது. அதிமுக ஆட்சியில் தான் ஏராளமான ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டது. தேவாலயங்களுக்கும் நிதிகள் வழங்கப்பட்டது. அனைத்து மதங்களுக்கும் சமமாக செயல்பட்டோம். இந்திய நாடு பல்வேறு மதங்கள், சாதிகள் கொண்ட அமைப்பு. அவரவர்களுக்கு பிரியப்பட்ட கடவுளை வணங்குகின்றனர். கோவில் கட்டுபவர்கள்பின் அனைவரும் சென்று விடுவார்கள் என்று சொல்ல முடியாது.
திமுக சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் பணியமர்த்தப்பட்ட சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார். புகார் கொடுத்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. சட்டமன்ற உறுப்பினர் மகன், மருமகள் சம்பந்தப்பட்டதே இதற்கு காரணம். இது தொடர்பாக பிப்ரவரி 1ம் தேதி அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அவசரப்பட்டு திறந்து விட்டனர். முழுமையான பணிகள் முடிந்த பின்னரே திருத்திருக்க வேண்டும். அவசரத்தில் திறந்ததால் தான் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். முழுமையாக கவனம் செலுத்தி செயல்பட வில்லை" என எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் பாஜக 25 க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும்: மதுரையில் சிவராஜ் சிங் சவுகான் பேச்சு