சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே பெட்ரோல் திருடியதாக வடமாநில இளைஞர் மீது அப்பகுதி பொதுமக்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடமாநிலங்களில் நிலவும் வேலையிண்மை காரணமாகவும், தமிழகத்தில் நிலவும் கூலித் தொழிலாளர்களின் தட்டுப்பாடு காரணமாகவும் வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி கட்டுமானம், சாலை அமைத்தல், காவலாளி என பல துறைகளிலும் வடமாநில இளைஞர்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றனர்.
இதுபோன்ற துறைகளில் வடமாநில இளைஞர்களின் செயல்பாடு அதிகரிப்பது போன்று கொலை, கொள்ளை, திருட்டு உள்ளி்ட்ட குற்றச் சம்பவங்களிலும் வடமாநில இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் புதிதாகக் காணப்படும் வடமாநில இளைஞர்களை சந்தேகக் கண்ணோடு பார்க்கும் மனநிலையே பலரிடமும் உள்ளது.
குறிப்பாக கிராமப் புறங்களில் தற்போதும் வடமாநில இளைஞர்கள் மீதான தவறான கண்ணோட்டத்தால் அவ்வபோது சில அம்பாவித சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டு வருகின்றன. அதன்படி சேலம் மாவட்டம் வீரபாண்டி பகுதியில் சுற்றித்திரிந்த வடமாநில இளைஞர் ஒருவரை அப்பகுதி பொதுமக்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கத் தொடங்கினர்.
தனியாக நின்று கொண்டிருக்கும் இருக்கர வாகனங்களை குறி வைத்து பெட்ரோல் திருட்டி ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், அந்த இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த இளைஞருக்கு திடீரென வலிப்பு ஏற்படேவே அதனையும் பொருட்படுத்தாமல் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த சில கல்லூர் மாணவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் தாக்குதலுக்கு உள்ளான இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.