
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. இந்த தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது. சினிமா நட்சத்திரமாக திகழ்ந்த நடிகை குஷ்பு அரசியலில் திமுக, காங்கிரஸ் என கடந்த 10 ஆண்டுகளாக பயணித்து வந்தாலும் முதல் முறையாக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் டாக்டர் எழிலன் போட்டியிடுகிறார்.
திமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலனை ஆதரித்து கடந்த 26ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசுகையில்;- ஸ்டாலின் நல்ல உறவின் மூலம் பிறந்த குழந்தை” என்றும் ”முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கள்ள உறவில் பிறந்த குழந்தை என்று பேசினார்.
தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசாவை கண்டித்து அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முதல்வரின் தாயாரை அவமதிக்கும் விதமாக பேசிய ஆ.ராசாவால் கொந்தளித்து போயுள்ள அதிமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று ஆ.ராசா பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் அயனாவரம் சிக்னல் அருகே அவருடைய உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.
அதேபோல் முதலமைச்சரின் சொந்த ஊரும், சட்டமன்ற தொகுதியுமான எடப்பாடியில் அதிமுகவைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கையில் கருப்புக்கொடியுடன் பிரம்மாண்ட பேரணி நடத்தினர். நாவடக்கம் இல்லாமல் முதலமைச்சரை தரக்குறைவாக விமர்சித்த ஆ.ராசாவின் உருவ பொம்மையை எடப்பாடி பேருந்து நிலையம் அருகே எதிர்த்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.