சேலம் மாவட்டம் மல்லூரில் உள்ள பிரபல தனியார் தீம் பார்க்கில் தண்ணீரில் விளையாடிய சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் கிச்சிப்பாளையத்தில் உணவகம் நடத்தி வருபவர்கள் ரஞ்சித், உஷா தம்பதியினர். இவர்களுக்கு சவுடேஸ்வரன், துவேஸ்வரன் ஆகிய இரு மகன்கள் இருந்தனர். பள்ளியில் ஆண்டு தேர்வுகள் நிறைவு பெற்று கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ரஞ்சித், உஷா தம்பதியினர் தங்கள் மகன்கள் இருவரையும் பொழுது போக்கிற்காக அருகில் உள்ள தனியார் தீம் பார்க் ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அனைவரும் குடும்பத்துடன் சேர்ந்து நீரில் சருக்கி விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர். நீரில் நீண்ட நேரம் விளையாடிக் கொண்டிருந்த சவுடேஸ்வரன் (வயது 13) திடீரென மயக்கமடைந்து நீரில் மூழ்கியுள்ளான். அந்த நேரத்தில் சிறுவனின் அருகில் யாரும் இல்லாத காரணத்தினால் சிறுவனை உடனடியாக நீரில் இருந்து வெளியில் கொண்டு வர இயலவில்லை. சற்று நேரம் கழித்து சிறுவன் நீரில் மூழ்கியதை அறிந்த பெற்றோர் மயங்கிய நிலையில் சிறுவனை மீட்டனர்.
ஒகேனக்கல்லில் ஓட்டுநரின் அவசர புத்தியால் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து - பயணிகள் ஆவேசம்
உடனடியாக சிறுவன் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சிறுவனின் இறப்பு குறித்து பெற்றோர் கூறுகையில், சவுடேஸ்வரன் குளித்துக் கொண்டிருந்த பகுதியில் ஆழம் இல்லை. 3 அடி உயரத்திற்கு தான் தண்ணீர் இருந்தது. ஆனால், தண்ணீரில் அதிக அளவில் குளோரின் கலக்கப்பட்டிருந்ததாலும், அதனை சிறுவன் குடித்ததாலும் தான் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.
போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாத பொழுதுபோக்கு பூங்காவின் அலட்சியம் தான் இன்று ஒரு உயிரை பறித்துள்ளது என்று குற்றம் சாட்டினர். பொதுவாக இதுபோன்ற பொழுதுபோக்கு பூங்காக்களில் குறைவாக தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் அதிக அளவிலான நபர்கள் குளிப்பதால் நீரின் தன்மை மாறாமல் இருப்பதற்காக அதில் குளோரின் கலக்கப்படுவது இயல்பு தான். ஆனால், இங்கு அதிக அளவில் குளோரின் கலக்கப்பட்டதால் தான் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Accident: காரும் - அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதல்! 4 பேர் உடல் நசுங்கி பலி! 8 பேர் படுகாயம்.!
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், சிறுவனின் மரணத்தை சந்தேக மரணமாக குறிப்பிட்டு பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கின்றனர்.