பெரம்பலூர் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்ததில் ஓட்டுநர், நடத்துநர்ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெரம்பலூர் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்ததில் ஓட்டுநர், நடத்துநர்ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து திருச்சி நோக்கி இரும்பு ராடு மற்றும் கம்பிகளை ஏற்றிக்கொண்டு கனரக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கொணலை கிராமத்தை சேர்ந்த டிரைவர் பாலன் என்பவர் ஓட்டி வந்தார். அதேவேளையில், சென்னையில் இருந்து திருச்சிக்கு 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து வந்துக்கொண்டிருந்தது.
அரசு பேருந்து இன்று அதிகாலை பெரம்பலூர் மாவட்ட எல்லை பகுதியான சின்னாறு தனியார் பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரியின் பின்புறத்தில் பேருந்து வேகமாக மோதியது. இதில், பேருந்தில் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. அதிகாலையில் விபத்து நடந்ததும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பயணிகள் அலறியடித்து எழுந்தனர். இந்த கோர விபத்தில் முன்னாள் அமர்ந்திருந்த டிரைவர் தேவேந்திரன், கண்டக்டர் முருகன் ஆகிய இருவரும் இருக்கையிலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
மேலும் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 15 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக உடனே போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.