இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதிய மினிலாரி..! துக்க வீட்டிற்கு சென்ற கணவன்-மனைவி பரிதாப பலி..!

By Manikandan S R S  |  First Published Nov 7, 2019, 5:32 PM IST

சின்ன சேலம் அருகே இருசக்கர வாகனம் மீது மினிலாரி மோதிய விபத்தில் கணவன்-மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.


பெரம்பலூர் மாவட்டம் நம்பியூரைச் சேர்ந்தவர் மணிவேல்(58 ). இவரது மனைவி அஞ்சலை(55). மணிவேல் அந்த பகுதியில் கூலித்தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். இதனிடையே இவர்களது உறவினர் ஒருவர் சின்ன சேலம் அருகே இருக்கும் மேல்நாரியப்பனூர் கிராமத்தில் நேற்று உடல்நலக் குறைவால் மரணமடைந்திருக்கிறார்.

Tap to resize

Latest Videos

undefined

இதனால் மணிவேலுவும் அவரது மனைவியும் துக்கம் விசாரிப்பதற்காக தங்களது இருசக்கர வாகனத்தில் கிளம்பியுள்ளனர். வாகனத்தை மணிவேல் ஓட்டி வந்துள்ளார். சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் வாசுதேவனூர் அருகே அவர்கள் வந்துள்ளனர். அப்போது சாலையை கடப்பதற்காக இருசக்கர வாகனத்தை மணிவேல் திருப்பி இருக்கிறார். அந்த நேரத்தில் கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் நோக்கி வேகமாக வந்த மினிலாரி ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

பலத்த காயமடைந்த மணிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அஞ்சலை, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்தனர். உயிரிழந்த மணிவேலின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அஞ்சலையும் மரணமடைந்தார். அவரது உடலும் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவலர்கள், லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பணம் செலுத்தும் மெஷினில் கள்ளநோட்டுகள்..! அதிர்ச்சி தகவல்..!

click me!