நீலகிரியில் இன்று மேலும் 2 புலிக்குட்டிகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ளது சின்ன குன்னூர். இந்தப் பகுதி முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதியாகும். இப்பகுதியில் கடந்த 14ம் தேதி புலிக்குட்டிகள் நடமாடுவதாக விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து ஒரு வனக் குழுவினர் விரைந்து அப்பகுதியில் முகமிட்டு கண்காணித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து கண்காணிப்பின் போது 4 புலி குட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதே பகுதியில் கடந்த மாதம் ஒரு பெண் புலி நடமாடுவதை விவசாயிகள் பார்த்ததாகக் கூறியுள்ளனர். இந்நிலையில் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை தொடர் கண்காணிப்பு நடத்தப்பட்டது.
கடந்த 17ம் தேதி புலிக்குட்டி ஒன்று இறந்து கிடந்ததை வனத்துறையினர் கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கூடலூர் கோட்டத்தைச் சேர்ந்த நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு மற்ற குட்டிகள் மற்றும் தாயை தேடுமபணியை தீவிரப் படுத்தினர். கடந்த 18ம் தேதி தேடுதல் குழுவினர் அப்பகுதியில் கடமான் ஒன்று இறந்து கிடந்ததை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.
மேலும் இன்று அப்பகுதியில் ஒரு புலிக்குட்டியை உயிருடன் வனத்துறையினர் மீட்டெடுத்தனர். மீட்ட புலி குட்டிக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அதே பகுதியில் இரண்டு புலிக்குட்டிகள் சடலமாகக் கிடந்ததை கண்ட வனத்துறையினர் அந்த இரு குட்டிகளின் சடலத்தை மீட்டு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் நெறி முறையின் படி புலிக் குட்டிகளின் சடலங்களை பிரேத பரிசோதனை செய்ய வனத்துறையினர் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு எமரால்டு பகுதியில் இரண்டு புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது. தேசிய விலங்கான புலிகளின் தொடர் மரணத்தால் வனத்துறையினர் பதற்றத்தில் உள்ளனர்.