கொரோனாவுக்கு எதிரான போரில் கொங்கு மண்டலம் வெற்றி கண்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு உறுதியான ஆரம்பக்கட்டத்தில், அதிவேகமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்தது ஈரோட்டில் தான். மளமளவென உயர்ந்த எண்ணிக்கை, சில நாட்களிலேயே கட்டுக்குள் வந்தது. வேகமாக 70ஐ எட்டியது பாதிப்பு. ஆனால் அதன்பின்னர் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஈரோட்டில் ஒருவருக்கு கூட தொற்று உறுதியாகவில்லை.
ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70 பேரில் 69 பேர் குணமடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார். கொரோனா ஆரம்பத்தில் வேகமாக பரவியதில் முதன்மையாக இருந்த ஈரோடு, முதல் மாவட்டமாக கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்டது. அதன்பின்னர் தூத்துக்குடி, தேனி, கரூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களும் கொரோனாவிலிருந்து மீண்டன. ஆனால் அந்த மாவட்டங்களில் மறுபடியும் தொற்று உறுதியானது.
undefined
ஈரோட்டுக்கு அடுத்து மற்றொரு கொங்கு மாவட்டமான திருப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 114 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர். அதனால் திருப்பூரும் கொரோனாவிலிருந்து மீண்ட மாவட்டமாக திகழ்கிறது. திருப்பூரிலும் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக புதிய தொற்று எதுவும் இல்லை.
கோயம்பேடு சந்தையை மையமாக வைத்து, அரியலூர், விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தாறுமாறாக அதிகரித்த நிலையில், நேற்று சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் பாதிப்பு வெகுவாக கட்டுக்குள் வந்துள்ளது.
மற்ற மாவட்டங்கள் மறுபடியும் கொரோனாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவரும் நிலையில், ஈரோடு, திருப்பூரை தொடர்ந்து கோவை, சேலம், நாமக்கல் ஆகிய கொங்கு மாவட்டங்களும் கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்டுள்ளன.
கோவையில் மொத்தம் 146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் இருவர் மட்டும் இறந்த நிலையில், 144 பேர் குணமடைந்தனர்.
இந்நிலையில், இன்று ஒரே நாளில் நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களும் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளன. சேலத்தில் 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 30 பேர் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இன்று எஞ்சிய 5 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர். நாமக்கல்லில் மொத்த பாதிப்பு 77. அதில் 61 பேர் ஏற்கனவே குணமடைந்த நிலையில், எஞ்சிய 16 பேரும் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். எனவே சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய இரண்டு மாவட்டங்களும் இன்று கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்டுள்ளன.
எனவே ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம் ஆகிய கொங்கு மாவட்டங்கள் கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்டு நம்பிக்கையளிக்கின்றன.