நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் ஒருவர் கூட இல்லாத நிலையில் நாமக்கல் மாவட்டம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொடிய வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுரவேகம் எடுத்திருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தினமும் 500ஐ கடந்திருக்கிறது. நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,227 ஆக உயர்ந்திருக்கிறது.
undefined
இன்றைய நிலவரப்படி 2,176 பேர் கொரோனாவில் இருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர். அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் நேற்று ஒரே நாளில் 380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது வரை சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5,262 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் கொங்கு மாவட்டங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து வேகமாக மீண்டு வருகின்றன. ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்கள் கொரோனாவில் இருந்து மீண்டிருந்த நிலையில் நாமக்கல் மாவட்டமும் அதில் தற்போது இணைந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 5,600 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 77 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்களின் சிகிச்சைகள் மூலம் நேற்று முன்தினம் வரை 62 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மீதமிருந்த 15 பேரும் சிகிச்சை முடிந்து நேற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனா நோயாளிகள் இல்லாத மாவட்டமாக நாமக்கல் மாறியுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மெகராஜ் கூறும்போது, நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் ஒருவர் கூட இல்லாத நிலையில் நாமக்கல் மாவட்டம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்படுகிறது. எனினும் கொரோனா தொற்று மீண்டும் வர வாய்ப்பில்லை எனக் கூற இயலாது. குணமடைந்து வீட்டுக்கு செல்பவர்களுக்கு 15 நாட்களுக்கான கபசுரக் குடிநீர், விட்டமின் சி, ஹோமியாபதி மருந்து மற்றும் நெல்லிக்காய் லேகியம் அடங்கிய இரு கிட் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 14 நாட்களுக்கு கொரோனா தொற்று இல்லாமல் இருந்தால் ஆரஞ்சு மண்டலமாக நாமக்கல் மாவட்டம் மாற்றப்படும் என தெரிவித்துள்ளார்.
தற்போது வரை ஈரோடு, சிவகங்கை,திருப்பூர். கோவை, நாமக்கல் ஆகிய 5 மாவட்டங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.