சமீபத்தில் சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுகவின் உண்மையான தொண்டன் எப்பொழுதும் கட்சியில் இருந்து விலகுவது கிடையாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கருத்து தெரிவித்துள்ளார்.
2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை சோழவந்தான் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் மாணிக்கம். அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய போது, அவருக்கு ஆதரவு குரல் கொடுத்த முதல் எம்.எல்.ஏ. சோழவந்தான் மாணிக்கம். மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எடப்பாடி பழனிச்சாமி எதிராக வாக்களித்தார். அப்போது அமைச்சராக இருந்த ஆர்.பி.உதயகுமாரை கடுமையாக விமர்சித்தும் உள்ளார். மேலும் இரு தரப்பும் இணைந்த போது , வழிக்காட்டுதல் குழு அமைக்கப்பட்டது . அந்த குழுவில் ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக சோழவந்தான் மாணிக்கமும் இடம்பெற்றார்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமையன்று பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற கட்சியின் பொதுக்கூட்டத்தில், அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியும், வழிக்காட்டுதல் குழு உறுப்பினருமான மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், அக்கட்சியிலிருந்து விலகி, தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். மேலும் அதிமுக இரண்டாகப் பிளவுப்பட்டபோது, பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலு மதுரை வட்டாரத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகியாக மாணிக்கம் செயல்பட்டு வந்தார் .இதனால் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பாஜகவில் இணைந்துள்ளது அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
undefined
இந்நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க சார்பில் போட்டியிட விரும்புவோரிடம், விருப்ப மனு வாங்கும் பணி துவங்கியுள்ளது. இதனையொட்டி, நாமக்கல் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட உள்ளவர்களுக்கான விருப்ப மனுக்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான தங்கமணி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினருக்கு விருப்ப மனுக்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவில் இருந்து ஒரு சிலர் சொந்த ஆதாயத்திற்காகவும் நிர்பந்தத்தின் காரணமாகவும் மாற்றுக் கட்சிக்கு செல்கின்றனர். ஆனால், அதிமுகவின் உண்மை விசுவாசியான ஒரு தொண்டன்கூட இந்தக் கட்சியில் இருந்து விலகுவது கிடையாது. தொண்டர்கள் அனைவருமே அதிமுகவில் உள்ளனர் என்று தெரிவித்தார். மேலு நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுகவினர் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர். ஏற்கனவே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பணம் கட்டியவர்கள் மீண்டும் கட்ட தேவையில்லை. அதற்கான ரசீது வைத்து இருந்தாலே போதுமானது என்றார்.