மத்தியில் இந்தி, இந்துத்துவா திணிப்பு இல்லாத மதசார்பற்ற அனைத்து மாநிலங்களுக்கும் சமமான நிதி பங்கீடு அளிக்கும் அரசு அமைய வேண்டும் என தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள தனியார் விடுதியில் காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் சிறியது முதல் பெரிய நிறுவனங்கள் வரை நன்கொடை வழங்கி உள்ளன. இதுகுறித்து ஓய்வுபெற்ற நீதிபதியை கொண்டு முழுமையான விசாரணை நடத்த வேண்டும். பிரதமர் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வரவேண்டும், தமிழகத்தின் கலாசாரத்தை அறிந்து தமிழகத்தின் உணவுகளை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியா கூட்டணியில் யார் யார் உள்ளார்கள் என்பதை எங்களால் கூற முடியும். ஆனால் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் யார் யார் உள்ளார்கள் என அவர்களால் சொல்ல முடியுமா? ஒரே நாடு ஒரே தேர்தல் என கூறும் பாஜக ஒரே கட்டமாக இந்தியா முழுவதும் ஒரே தேதியில் தேர்தலை நடத்த வேண்டும். பிரதமரின் பயணத்திற்க்காகவே 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகம், புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.
போதைபொருள் என்பது இந்தியா முழுவதும் உள்ள பிரச்சினை. இதனை மாநில பிரச்சினையாக ஒரு கட்சி கொண்டு வருகிறது. குஜராத் மாநிலம் பந்த்ரா துறைமுகத்தின் வழியாக அதிகளவு போதை பொருள் வருகிறது. இதனை முழுமையாக கட்டுபடுத்த வேண்டும். இதை தேசிய பிரச்சினையாக பார்க்க வேண்டும். போதை பொருட்களை முழுமையாக ஒழிக்க போதைக்கு அடிமை ஆனவர்களை அதில் இருந்து மீட்க மத்திய அரசு அதிகளவு போதை மறுவாழ்வு மையங்களை அமைக்க வேண்டும்.
மத்தியில் இந்தி, இந்துத்துவா திணிப்பு இல்லாத மதச்சார்பற்ற அனைத்து மாநிலங்களுக்கும் சமமான நிதி பங்கீடு அளிக்கும் அரசு அமைய வேண்டும் என தமிழக மக்கள் முடிவு செய்து விட்டனர் என்றார்.