
நாகப்பட்டினம் காடாம்பாடி மகாலட்சுமி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவன் நேசமணி. இவர் மீது நாகை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் குற்ற பின்னணி உடையவர்கள் பட்டியலிலும் இவரது பெயர் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் புதிய பேருந்து நிலையம் அருகே அரசு தலைமை மருத்துவமனை எதிரே உள்ள சாலையில் கத்தியை வைத்துக் கொண்டு இருச்சக்கர வாகனத்தில் சென்றவர்களையும், பொது மக்களையும் கத்தியால் குத்த முயன்றதால் பொது மக்கள் அச்சமடைந்து சிதறி ஓடினர்.
மேலும் அவ்வழியே வந்த டிராக்டரை நிறுத்தி ஓட்டுனரை குத்த முயன்று ரகளையில் ஈடுப்பட்டான். தகவல் அறிந்து வந்த வெளிப்பாளையம் போலீசார் அவனை மடக்கி பிடிக்க முற்பட்ட போது போலீசாரையும் கத்தியால் குத்த முயன்றதால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து தன்னை பிடித்தால் கழுத்தை அறுத்துக் கொள்வதாக பயமுறுத்திய அவன் தன்னுடைய கழுத்தை அறுத்துக் கொண்டு ரத்தம் வழிய, வழிய பொது மக்களையும் குத்துவதற்கு பாய்ந்தான். இதற்கு பயந்து வாகன ஓட்டிகள் வண்டிகளை நிறுத்தியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சர்ச்சையை கிளப்பிய மாட்டு சிறுநீர் பேச்சு.. திமுக எம்பி செந்தில்குமாரை கண்டித்த மு.க ஸ்டாலின்..!
தொடர்ந்து பொது மக்கள் உதவியுடன் மடக்கி பிடித்த போலீசார் அவனை சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை எடுக்க மறுப்பு தெரிவித்து தப்பிக்க முயன்றான். அவனை துரத்தி பிடிக்க சென்ற போலீசாரை மருத்துவமனை வாசலிலே வைத்து துரத்தி துரத்தி கத்தியால் குத்த பாய்ந்த வீடியோவும் தற்போது வெளியாகி உள்ளது. இதனால் மருத்துவமனை வளாகமே பரப்பரப்பானது. தொடர்ந்து மடக்கி பிடித்த போலீசார் காவல் நிலையத்திற்கு இழுத்து சென்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
விசாரணையில் 6 வருடத்திற்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணிற்கு வேறு ஒருவரோடு திருமணம் ஆன நிலையில் கடந்த 2 வருடமாக அதே பெண்ணோடு தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண்ணின் கணவன் வெளிப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது விசாரணைக்கு வந்தவன் அந்த பெண்ணை தன்னோடு சேர்த்து வைக்குமாறு ரகளையில் ஈடுப்பட்டது தெரியவந்துள்ளது. நாகையில் முன்னாள் காதலியும், இன்னொருவரின் மனைவியுமான பெண்ணை தன்னோடு சேர்த்து வைக்க சொல்லி கத்தியால் பொது மக்கள் மற்றும் போலீசாரையும் குத்த பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.