கர்ப்பிணியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை? நடவடிக்கை எடுக்க மறுப்பதாக கூறி இளம்பெண் தர்ணா

By Velmurugan s  |  First Published Apr 4, 2024, 5:09 PM IST

வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தும் கணவர் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இளம் பெண்ணால் பரபரப்பு.


நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அடுத்த கொங்கராநல்லூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன் மகள் சரண்யா (வயது 26), நர்சிங் படித்துவிட்டு கோயமுத்தூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்போது சரண்யாவிற்கு தனியார் மேட்ரிமோனியல் மொபைல் ஆப் மூலம் வரன் தேடி உள்ளனர். இதில் திருக்குவளையை அடுத்த கொத்தங்குடி பாரதி தெருவைச் சேர்ந்த தனபால் மகன் ரகு என்பவர் சரண்யாவின் மொபைல் எண்ணிற்கு நேரடியாக தொடர்பு கொண்டு  பேசியதாகக் கூறப்படுகிறது. 

சரண்யாவிடம் ஆசை வார்த்தை கூறி வீட்டிற்கு தெரியாமல் திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவிலுக்கு எதிரில் உள்ள முருகன் சன்னதியில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டு பெண்ணை வீட்டிற்கு அழதை்துச் சென்றுள்ளார் ரகு. அவர்கள் பெற்றோரும் சரண்யா மற்றும் ரகுவுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவர்கள் வீட்டில் வசிக்க அனுமதி அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே சரண்யா கர்ப்பமடைந்துள்ளார். 3 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் ரகுவின் சகோதரிகள் சுமதி, சுதா ஆகியோர் சரண்யாவின் பெற்றோரிடம் வரதட்சணை பெற்று வருமாறு தெரிவித்துள்ளனர். 

Tap to resize

Latest Videos

undefined

அனல் பறக்கும் மக்களவைத் தேர்தல் களம்; 12ம் தேதி கோவையில் ஒரே மேடையில் ராகுல், ஸ்டாலின்

இதற்கு சரண்யா மறுப்பு தெரிவித்ததால் சரண்யாவை ரகுவின் சகோதரி, தாய் ஆகியோர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில்  சரண்யாவின்  இரட்டை குழந்தைகள் கருவில் கலைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குடும்பத்தினரிடம் இருந்து தனது மனைவியை ரகு அழைத்துக் கொண்டு சென்னை திருவான்மியூரில் தங்கி உள்ளார். இந்த நிலையில் மீண்டும் சரண்யா இரண்டாவது முறையாக கருத்தரித்துள்ளார். இந்த தகவலை அறிந்த ரகுவின் சகோதரிகள் கடந்த 22ம் தேதி மீண்டும் சென்னையில் உள்ள வீட்டிற்கு வந்து சொந்த ஊரிலேயே வாழ வைப்பதாக கூறி ரகு மற்றும் சரண்யாவை கொத்தங்குடிக்கு அழைத்து வந்துள்ளனர். 

கொத்தங்குடியில் மீண்டும் சரண்யா மீது குடும்பத்தினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 24ம் தேதி சரண்யா புகார் அளித்துள்ளார். காவல் நிலையத்தில் கணவர் ரகுவை அழைத்து போலீசார் விசாரித்தபோது லிவிங் டுகெதர் என்கிற முறையில் ஒன்றாக வாழ்ந்தோம் எனவும், சரண்யாவை திருமணம் செய்ய வில்லை என காவல் நிலையத்தில் ரகு தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

மாட்டு வண்டியில் சென்று ஸ்கோர் செய்ய நினைத்த தேமுதிக வேட்பாளர்; மாடு மிரண்டதால் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்

இதனால் நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், புகார் குறித்து விசாரிக்க ஒன்றும் இல்லை என கூறி சரண்யாவை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கடந்த 27ம் தேதி நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங்கிடம் கர்ப்பிணி பெண் சரண்யா புகார் அளித்தார். புகார் குறித்து விரிவான விசாரணை செய்து வழக்கு பதிவு செய்ய அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு எஸ்.பி. உத்தரவிட்டார். ஆனால் கடந்த ஏழு நாட்களாக தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அலைகழிப்பதாக குற்றம் சாட்டி கர்ப்பிணி பெண் சரண்யா காவல் நிலைய வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

மேலும் கணவர் ரகுவின் குடும்பத்தினரிடம் போலீசார் பணத்தை பெற்றுக் கொண்டு தனது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பெண்களுக்காக உள்ள காவல் நிலையம் ஆண்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு செயல்படுவதாகவும் சரண்யா குற்றம் சாட்டினார். தனக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் நடத்தப் போவதாக அவர் தெரிவித்தார். இதனையடுத்து வெளிப்பாளையம் போலீஸ் ஆய்வாளர் சரண்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரிவான விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து சரண்யா தனது போராட்டத்தை கைவிட்டார். கர்ப்பிணி பெண் போராட்டம் காரணமாக காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

click me!