நாகையில் மத்திய அரசின் சிபிசிஎல் நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கான விவசாய கூலித் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் அருகே பனங்குடியில் மத்திய அரசின் பொதுப்பணித்துறை நிறுவனமான சிபிசிஎல் ஆலை உள்ளது. ரூ.31 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் ஆலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக 620 ஏக்கர் விவசாய நிலம் பனங்குடி, கோபுராஜபுரம், முட்டம், நரிமணம் ஆகிய பகுதிகளில் இருந்து கையகப்படுத்தப்பட்டுள்ளது. கையகப்படுத்திய நிலத்திற்கு R&R (மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீட்டு தொகை ) உரிய இழப்பீடு வழங்காமல் சிபிசிஎல் நிறுவனம் காலம் தாழ்த்தி வருவதாகக் கூறப்டுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சாகுபடிதாரர்கள், விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் தொடர்ந்து 11வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
undefined
போராட்டத்தை முன்னிட்டு நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 400-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று நாகப்பட்டினம் வருவாய்த் துறையினர் நிலம் அளவீடு பணியை ரவிச்சந்திரன், கார்த்தி, ரமேஷ்குமார், சக்கரவர்த்தி உள்ளிட்ட 4 வட்டாட்சியர்கள் தலைமையில் வருவாய் துறையினர் 4 குழுக்களாக பிரிந்து வெவ்வேறு இடங்களில் அளக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
நாகூர், வேளாங்கண்ணில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளித்த மனித கடவுள்
4 வட்டாட்சியர்களுடன் வட்ட துணை ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவையர்கள் என 48 அரசு ஊழியர்கள் அளக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் நேற்று 90% நில அளவீடு பணிகள் முடிவுற்றிருந்தது. எல்லை கல் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று அதிகாலை முதல் மீதமுள்ள 10% பணிகளை தொடங்கினர். நிலம் கையகப்படுத்தப் படுவதால் ஆத்திரமடைந்த நரிமணம் வெள்ளப்பாக்கம் பகுதிகளைச் சேர்ந்த கூலி தொழிலாளர்கள் எல்லை கல் பதிக்கும் பணியினை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அவர்களை சுற்றி வளைத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மகேஸ்வரி, துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் கலைந்து செல்வதற்கான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விவசாயிகள் இடையே உடன்பாடு ஏற்படாத நிலையில் உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளர்களை கைது செய்து மூன்று வாகனங்களில் நாகூர் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
அரசை விமர்சிப்பவர்களை திமுக வெளிப்படையாக அச்சுறுத்துகிறது; பத்திரிகையாளர் கைதுக்கு சீமான் கண்டனம்
சிபிசிஎல் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தொடர்ந்து 11-வது நாளாக நடைபெறும் போராட்டத்தில் நேற்று 19 நபர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று நரிமணம், வெள்ளப்பாக்கம் பகுதியில் வருவாய் துறை பணியினை தடுக்க முற்பட்ட 100க்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பு. இதனால் பனங்குடி கோபுராஜபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு பரபரப்பான சூழல் நிலவுகிறது.