கொரோனாவில் இருந்து மீண்டு சீர்காழி வருகை தந்த அவருக்கு 15க்கும் மேற்பட்டோர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்து ஊர்வலமாக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. நாடுமுழுவதும் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் தடையை மீறி கூட்டமாக சென்றதாக காவல்துறையினருக்கு புகார் வந்தது
இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் தமிழ்நாட்டிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 1,477 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 16 பேர் பலியாகி இருக்கின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டு மருத்துவர்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் செய்தியாக தினமும் பலர் கொரோனா பாதிப்பில் இருந்து நலம் பெற்று வீடு திரும்புகின்றனர். இந்த நிலையில் நாகை அருகே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட ஒருவரை அப்பகுதி மக்கள் ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
undefined
நாகை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக டெல்லி சென்றிருந்தார். அவர் ஊருக்கு திரும்பிய பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்த அவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அவர் கொரோனா பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு பூரண நலம் பெற்றார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அந்நபர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட போதும் மேலும் சில நாட்களுக்கு சுய தனிமையில் இருக்குமாறு மருத்துவர்கள் அவருக்கு அறிவுரை வழங்கி இருந்தனர்.
இந்த நிலையில் கொரோனாவில் இருந்து மீண்டு சீர்காழி வருகை தந்த அவருக்கு 15க்கும் மேற்பட்டோர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்து ஊர்வலமாக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. நாடுமுழுவதும் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் தடையை மீறி கூட்டமாக சென்றதாக காவல்துறையினருக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவரை ஊர்வலமாக அழைத்துச் சென்ற 15 பேர் மீது சீர்காழி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியிருக்கின்றனர்.
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட ஒருவரை மக்கள் ஒன்றுகூடி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.