சீர்காழி அருகே எந்த வித ஆவணங்களுமின்றி கொண்டு வரப்பட்ட 21 டன் வெங்காயம் வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டுவரப்பட்டிருக்கும் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் வெங்காய விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 200 ரூபாயை தொட்டதால் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் என பலரும் பாதிப்படைந்தனர். இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. அதன்பிறகு விலை சற்று குறையத் தொடங்கியது. எனினும் இடையிடையில் மீண்டும் விலை உயர்ந்து வந்தது.
undefined
இந்தநிலையில் நாகை அருகே எந்தவித ஆவணங்களுமின்றி கொண்டு வரப்பட்ட 21 டன் வெங்காயம் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்கு வந்ததா? என சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். நாகை மாவட்டம் சீர்காழி அருகே இருக்கும் திட்டை பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது லாரி ஒன்றில் 21 டன் வெங்காயம் ஏற்றப்பட்டு வந்தது. அதை நிறுத்தி ஓட்டுனரிடம் அதிகாரிகள் விசாரணை செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வெங்காயம் வருவதாகவும் திட்டை பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்தி என்கிற வியாபாரிக்கு கொண்டு செல்வதாகவும் கூறியிருக்கிறார். எனினும் அவரிடம் அதுகுறித்த ஆவணங்கள் எதுவும் இல்லை. தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வெங்காயங்கள் வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு வரப்பட்டிருக்கும் என்கிற கோணத்தில் விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.