பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே மாதம் 4ம் தேதி தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்களை தமிழக காவல் துறையினர் கைது செய்தனர். பெண் காவலர்கள் குறித்து தரக்குறைவான வகையில் பேசிய விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டார். மேலும் கைது நடவடிக்கையின் போது அவரிடம் சுமார் 400 கிராம் அளவுக்க கஞ்சா இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டி காவல் துறையினர் கூடுதல் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு மதுரை மாவட்டம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தமிழக காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கஞ்சா வைத்திருந்த விவகாரத்தில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பாக நடைபெற்றது. அப்போது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். ஏற்கனவே இதே வழக்கில் ஜாமீன் கோரப்பட்ட நிலையில், அந்த மனுவை சவுக்கு சங்கர் தரப்போ வாபஸ் பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது முறையாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார்.