திருமங்கலத்தில் நடத்தப்பட்ட திடீர் சோதனை... மினி லாரியை சோதனையிட்ட போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

By Kanimozhi Pannerselvam  |  First Published Mar 23, 2021, 3:27 PM IST

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 7ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணப்பட்டுவாடா நடப்பதை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினரும் வருமான வரித்துறை அதிகாரிகளும் தீவிரமாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் அடுத்தடுத்து நடைபெற்று வரும் சோதனைகளில் கட்டுக்கட்டாக பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. 

Tap to resize

Latest Videos

அதேபோல் மது  விற்பனைக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் சட்டவிரோதமாக மதுவை கடத்தி வரும் முயற்சிகள் அதிக அளவில் நடைபெற உள்ளது வாய்ப்புள்ளது. எனவே அதுபோன்ற சட்டவிரோத போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுவதற்காக காவல்துறையினர் கடும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கார், வேன் ஆகியவற்றில் வேட்பாளர்களுக்கான பரிசு பொருட்களை மறைத்துவைத்து எடுத்துச் செல்லும் செயல்களும் நடக்கும் என்பதால், காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் திருமங்கலம் எஸ்.ஐ. பாலமுருகன் மற்றும் தனிப்பிரிவு போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த மினி லாரியை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது மினி லாரியில் பண்டல் பண்டலாக குட்கா புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. 

போலீசார் விசாரணையில்  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் மாடசாமி, சேலத்தில் இருந்து குட்கா போன்ற புகையிலை பொருட்களை விருதுநகருக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் மினி லாரி மற்றும் 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாடசாமியிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
 

tags
click me!