மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் கூறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுங்கள்.. உயர்நீதிமன்றம் அதிரடி..!

Published : Sep 15, 2021, 05:10 PM IST
மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் கூறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுங்கள்.. உயர்நீதிமன்றம் அதிரடி..!

சுருக்கம்

பெற்றோர்கள் ஆன்லைன் வகுப்பால் மாணவர்களின் கற்பித்தல் பாதிக்கும் என கருதி நேரடி வகுப்பிற்கு மாணவர்களை அனுப்புகின்றனர். இதனால் பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதால், சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

மாணவர்கள் நேரடி வகுப்புக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

நெல்லையை சேர்ந்த அப்துல்வஹாபுதீன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகளும் நடைபெற்று வருகிறது. 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது. கொரோனா நோய் தொற்றின் 3-வது அலை அதிக அளவில் குழந்தைகளை பாதிக்கும் என கூறப்படும் சூழலில், சில பள்ளிகளில் மாணவர்கள் கண்டிப்பாக நேரடி வகுப்பிற்கு வரவேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். மேலும் சில பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுவது இல்லை.

பெற்றோர்கள் ஆன்லைன் வகுப்பால் மாணவர்களின் கற்பித்தல் பாதிக்கும் என கருதி நேரடி வகுப்பிற்கு மாணவர்களை அனுப்புகின்றனர். இதனால் பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதால், சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு செல்ல இடைக்கால தடை விதிப்பதோடு, அரசாணைக்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்;- 60க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனா நோய்த் தொற்றின் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். பல பள்ளிகளில் மாணவர்கள் கட்டாயம் நேரடி வகுப்பிற்கு வர வேண்டும் என கூறுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது. 

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கட்டாயமாக மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என கூறும் பள்ளிகளின் விவரங்கள் மனுதாரர் தெரிவித்தால் அந்த பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க நாங்கள் பரிந்துரை செய்கிறோம் எனத் தெரிவித்தனர். மேலும் வழக்கு குறித்து முதன்மை செயலாளர், பள்ளி கல்வித் துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!