நித்யானந்தா ஒரு பொருட்டே இல்லை. அவர் ஆதீன மடத்துக்குள் வந்தால் கைது செய்யப்படுவார் என்று மதுரை ஆதினத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் எச்சரித்துள்ளார்.
மதுரை ஆதீனத்தின் 292-ஆவது மடாதிபதி அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 13-ஆம் தேதி உடல் நலக் குறைவால் காலமானார். இதனையடுத்து மதுரை ஆதினத்தின் 293-ஆவது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பொறுப்பேற்றார். மதுரையில் இன்று அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மக்களோடு மக்களாக எப்போதும் நான் தொடர்பில் இருப்பேன். அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு என்ற போராட்டத்திற்காக கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடை பயணம் மேற்கொண்டவன் நான். அனைத்து அரசியல் கட்சிகளுடனும் நான் தொடர்புடையவன்.
என்னை சமூக நல்லிணக்க மாநாடுகளுக்கு அழைத்தால் நிச்சயம் செல்வேன். திருக்குர்ஆனையும், பைபிளையும் ஏற்றுகொள்வேன். நித்தியானந்தா ஒரு பொருட்டே இல்லை. அவர் ஆதீன மடத்துக்குள் வந்தால் கைது செய்யப்படுவார்” என்று ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் தெரிவித்தார். மதுரை 292-ஆவது ஆதினம் மறைந்த பிறகு, அந்தப் பொறுப்பை தான் ஏற்றுக்கொண்டுவிட்டதாக நித்யனாந்தா அறிவித்திருந்தார். இந்நிலையில் 293-ஆவது ஆதினம் நித்யானந்தாவை எச்சரித்துள்ளார்.