மணிகண்டன் மரணத்தில் திடீர் திருப்பம்.. போலீஸ் தாக்கியதாலே உயிரிழந்தாரா? மதுரை கூடுதல் டிஜிபி பரபரப்பு தகவல்.!

By vinoth kumar  |  First Published Dec 15, 2021, 9:35 AM IST

மாணவரிடம் நடந்த விசாரணை, தாயார் மற்றும் உறவினர் வந்தது, அவர்கள் எழுதி கொடுத்துவிட்டு மகனை கூட்டிச் சென்றது உள்ளிட்ட சம்பவங்கள் அனைத்தும் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.


கல்லூரி மாணவர் மணிகண்டன் காவல்துறையினர் தாக்கியதால் உயிரிழக்கவில்லை என மதுரை கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் விசாரணைக்கு அழைத்து சென்ற கல்லூரி மாணவன் மணிகண்டன் போலீசார் தாக்கியதாலே உயிரிழந்தார் என உறவினர்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மணிகண்டன் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, பிரேத பரிசோதனை அறிக்கையில் கல்லூரி மாணவன் மணிகண்டன் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

Tap to resize

Latest Videos

இதுகுறித்து மதுரை கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே நீர்கோழியேந்தலை சேர்ந்தவர் கல்லூரி மாணவர் மணிகண்டன். இவர் கடந்த 4ம் தேதி மற்றொரு நபருடன் கீழத்தூவல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது மணிகண்டன் நிற்காமல் சென்றுள்ளார். இதனையடுத்து, அவரை போலீசார் விரட்டி பிடித்தனர். 

அப்போது, பின்னால் உட்கார்ந்து சென்ற நபர் தப்பி ஓடி விட்டார். போலீசார் மணிகண்டனை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர் கல்லூரி மாணவர் என்பது தெரியவர, குடும்பத்தினருக்கு தகவல் தரப்பட்டது. சிறிது நேரத்தில் அவரது தாயாரும், மற்றொருவரும் வந்து, எழுதி கொடுத்துவிட்டு மணிகண்டனை அழைத்துச் சென்றனர். மாணவரிடம் நடந்த விசாரணை, தாயார் மற்றும் உறவினர் வந்தது, அவர்கள் எழுதி கொடுத்துவிட்டு மகனை கூட்டிச் சென்றது உள்ளிட்ட சம்பவங்கள் அனைத்தும் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. அன்று நள்ளிரவே மாணவர் உயிரிழந்துவிட்டார். மறுநாள் காலை இவரது சகோதரர் அலெக்ஸ் பாண்டியன், காவல் நிலையத்தில் வந்து போலீசார் தாக்கியதால்தான் மணிகண்டன் உயிரிழந்தார் என புகார் கொடுத்தார். போலீசார் மீது புகார் என்பதால், பரமக்குடி ஆர்டிஓ விசாரணை நடத்தினார்.

 இதனையடுத்து, மணிகண்டன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மாணவர் தரப்பில் ஒருவர் பார்வையாளராக இருந்தார். இந்த பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ எடுக்கப்பட்டது.  ஆனால் இந்த பிரேத பரிசோதனையில் திருப்தியில்லை எனக்கூறி, மீண்டும் பரிசோதனை செய்ய மாணவர் தரப்பினர் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றனர். நீதிமன்ற உத்தரவுப்படி, தடய அறிவியல் நிபுணர்கள் குழுவினர் 2வது முறையாக மாணவரின் உடலை பரிசோதனை செய்தனர்.அப்போது, மாணவரின் உடல் உறுப்புகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்த பரிசோதனை முடிவு தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், மாணவர் விஷம் அருந்திதான் இறந்துள்ளார் என தெரிய வந்துள்ளது. எனவே போலீசார் தாக்கியதால் மாணவர் இறக்கவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. இருந்தாலும் மாணவர் விஷம் குடித்தது ஏன், அவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று தலைமறைவான நபர் யார் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. 

click me!