திருமண செய்வதாக கூறி வாலிபர் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றி விட்டதாக பெண் ஒருவர் மதுரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
சென்னை அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் காயத்ரி(26 ). இவர் கலை நிகழ்ச்சிகளில் மேடையில் பாட்டு பாடி நடனம் ஆடும் தொழில் செய்து வருகிறார்.
இவருக்கும் மதுரை மாவட்டம் மேலூரில் இருக்கும் சுப்பிரமணியன் என்பவரின் மனைவி மீனா(39 ) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு பேரும் நெருங்கிய தோழிகளாக பழகி உள்ளனர். காயத்ரி பலமுறை மீனாவையும் சந்தித்திருக்கிறார். இந்த நிலையில் மீனா மூலமாக சக்திவேல்(29 ) என்கிற வாலிபர் காயத்ரிக்கு அறிமுகமாகியிருக்கிறார்.
நண்பர்களாக நெருங்கி பழகிய சக்திவேலும் காயத்ரியும் நாளடைவில் காதலிக்க தொடங்கியிருக்கின்றனர். காதலர்களாக இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்திருக்கின்றனர். மிகவும் நெருங்கிப் பழகிய சக்திவேல், திருமணம் செய்வதாக கூறி காயத்ரியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். மேலும் காயத்ரியிடம் இருந்து 1 லட்சத்து 24 ஆயிரம் பணம் வாங்கியுள்ளார்.
அதன்பிறகு காயத்ரியுடன் இருந்த பழக்கத்தை நிறுத்திய சக்திவேல் வேறொரு பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். இதற்கு காயத்ரியின் தோழி மீனாவும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த காயத்ரி அவர்கள் இருவர் மீதும் மதுரை மேலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்.
இதுகுறித்து மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சக்திவேல் மற்றும் மீனாவை கைது செய்துள்ளது.