மதுரையில் பள்ளி, கல்லூரி மாணவிகள் காணாமல் போவதாவாக காவல்துறைக்கு புகார் வந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே இருக்கிறது மங்களபட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பானு(17 ). பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. மதுரையில் இருக்கும் ஒரு அரசு கல்லூரியில் பி.ஏ முதலாமாண்டு படித்து வருகிறார். தினமும் வீட்டில் இருந்து கல்லூரிக்கு இவர் பேருந்தில் சென்று வருவார் என்று கூறப்படுகிறது.
கடந்த 9ம் தேதி வழக்கம் போல கல்லூரிக்கு சென்ற இவர் மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் பல இடங்களில் அவரை தேடி பார்த்திருக்கின்றனர். அவர் படித்த கல்லூரியிலும் அவரின் நண்பர்களின் வீடுகளிலும் அவரின் பெற்றோர் தீவிரமாக தேடி இருக்கின்றனர். ஆனால் எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரின் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அவர்களின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை காணாமல்போன மாணவியை தீவிரமாக தேடி வந்தனர்.
இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில் நத்தம் அருகே இருக்கும் சமுத்திரப்பட்டி சேர்ந்த சம்சுதீன் என்பவரின் மகன் அப்பாஸ் மாணவியை கடத்திச் சென்றிருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து மாணவியையும் அந்த வாலிபரையும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
திருமங்கலத்தில் இருக்கும் பாலாஜி நகரை சேர்ந்தவர் ராஜி(14 ). பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. இந்த சிறுமி அங்கு இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் பள்ளிக்கு சென்றுவிட்டு வந்து மாலை நேரத்தில் அவர் வசிக்கும் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் டியூசன் செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் டியூசன் செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து அந்த மாணவி சென்றிருக்கிறார். இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அந்த மாணவியின் பெற்றோர் டியூசன் சென்டரில் சென்று பார்த்துள்ளனர். ஆனால் அங்கேயும் அந்த மாணவி இல்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்காததால் மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறை மாணவியை திருமங்கலத்தில் இருக்கும் கற்பகம் நகரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மகன் மோனிஸ்வர் கடத்திச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை அந்த மாணவியை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
மதுரை பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் காணாமல் போகும் சம்பவம் தொடர்கதை ஆகி வருவதால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.