ராணிப்பேட்டை அருகே 1 வயதில் பெண் குழந்தை இருக்க, கர்ப்பிணி பெண் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ராணிப்பேட்டை அடுத்த நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி தனலட்சுமி. செல்வம் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இதனிடையே தற்போது தனலட்சுமி 4 மாத கர்ப்பிணியாக இருக்கின்றார்.
நேற்று இரவு வேலை முடித்து வீட்டிற்கு வந்த செல்வத்திற்கும் அவரது மனைவி தனலட்சுமிக்கும் குடும்ப பிரச்சனைகள் காரணமாக சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது. அதன்பிறகு இரவு இரண்டு பேரும் தூங்க சென்று விட்டனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் செல்வம் வழக்கம் போல கட்டிட வேலைக்கு சென்று விட்டார்.
அதன்பிறகு காலை நீண்ட நேரம் ஆகியும் செல்வத்தின் வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். அவர்கள் செல்வத்தின் வீட்டுக்குச் சென்று தனலட்சுமியை அழைத்துள்ளனர். ஆனால் தனலட்சுமி எந்த சப்தமும் கொடுக்கவில்லை. ஆனால் குழந்தை பவித்ரா அழும் சத்தம் வெளியே கேட்டிருக்கிறது. இதனால் அங்கிருந்தவர்கள் வீட்டின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்து உள்ளனர்.
அப்போது தனலட்சுமி வீட்டில் இருக்கும் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அருகில் அவரது குழந்தை தாய் இறந்து போனது அறியாமல் அழுது கொண்டிருந்தது. இதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் பதறிப் போனார்கள். உடனடியாக இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் வீட்டின் கதவை உடைத்து தனலட்சுமியின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனலட்சுமியின் கணவர் செல்வத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்ப்பிணியான தனலட்சுமி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்கிற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.