வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வந்தது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன்காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. பல முக்கிய அணைகள் நிரம்பிய நிலையில் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் சில நாட்களுக்கு முன் மீண்டும் மழை வெளுத்து வாங்கியது.
இந்தநிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது. வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. அடுத்து வரும் சில தினங்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பல இடங்களில் வறண்ட வானிலை காணப்படும் என்றும் இரவு நேரங்களில் பனிப்பொழிவு இருக்கும் இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 3 சென்டிமீட்டர் மழையும், ஆனைக்காரன் சத்திரம் மற்றும் வேதாரண்யத்தில் 2 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.