மதுரை அருகே வட்டி பணம் கொடுக்க தவறிய தொழிலாளியின் வீட்டை இடித்த வழக்கில் மதிமுக பிரமுகர் உட்பட மூன்று பேர் கைதாகியுள்ளனர்.
மதுரையில் இருக்கும் சிங்கம்பிடாரி கோவில் பகுதியைச் சேர்ந்தவர் குமார். கூலித்தொழிலாளியாக பணியாற்றி வரும் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாகராஜன் என்பவரிடம் 2 பைசா வட்டிக்கு 5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். நாகராஜன் பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரராகவும் மதிமுக பிரமுகராகவும் இருந்து வருகிறார். இதனிடையே அதிகமான வறுமை காரணமாக குமாரால் வட்டியை முறையாக செலுத்தமுடியவில்லை என்று தெரிகிறது.
undefined
இதனால் 7 லட்சம் வரையில் வட்டி கேட்டு நாகராஜன் தொந்தரவு செய்து வந்துள்ளார். வட்டிப்பணத்தை குமார் செலுத்தாததால் கடந்த 11 ம் தேதி 20 பேர் கொண்ட கும்பலும் சென்று தொழிலாளி குமாரின் வீட்டை இடித்து தரைமட்டமாக்கியிருக்கிறார் நாகராஜன். இதனால் அதிர்ச்சியடைந்த குமார், மதுரை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
கந்துவட்டி நடத்தி குமார் வீட்டை இடித்ததாக மதிமுக பிரமுகர் நாகராஜன், சீனிவாசன், செந்தில் ஆகிய மூன்று பேரை மதுரை காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் பலர் கந்துவட்டி நடத்தியாக கைதாக கூடும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.