மதுரை அருகே ஊராட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அமமுக வேட்பாளர் கழுத்தில் வெங்காய மாலையுடன் வந்து பரபரப்பை கிளப்பினார்.
நாடு முழுவதும் வெங்காய விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் என பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்னர். வெங்காய விலை உயர்வால் உணவகங்களில் வெங்காயத்தை உபயோகப்படுத்துவதை உரிமையாளர்கள் தவிர்க்கும் நிலை ஏற்பட்டது. வெங்காய விலையை கட்டுப்படுத்த அரசும் பல முயற்சிகளை எடுக்க வருகிறது.
வெங்காய தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்தில் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. அதேபோல ரேஷன் கடைகளிலும் வெங்காய விற்பனையை மாவட்ட நிர்வாகங்கள் தொடங்கியுள்ளன. உச்சபட்சமாக 200 ரூபாயை தொட்ட வெங்காய விலை கடந்த இரண்டு நாட்களாக குறையத் தொடங்கியிருக்கிறது. நேற்று முன்தினம் கடலூரில் ஒரு கிலோ வெங்காயம் 10 ரூபாய் வரையில் குறைத்து விற்கப்பட்டது.
இந்தநிலையில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டிக்கும் வகையில் ஊராட்சித் தேர்தலில் போட்டியிட அமமுக வேட்பாளர் ஒருவர் வெங்காய மாலையுடன் மனுதாக்கல் செய்ய வந்துள்ளார். மதுரை மாவட்டம் யா.ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். தினகரனின் அமமுக கட்சியில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். நடைபெற இருக்கும் ஊராட்சி மன்ற தேர்தலில் 20 வார்டு உறுப்பினர் பதவிக்கு பாஸ்கர் போட்டியிட முடிவு செய்தார்.
அதற்காக மதுரை கிழக்கு ஒன்றிய ஊராட்சி அலுவகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய வருகை தந்த அவர் கழுத்தில் வெங்காய மாலை அணிந்திருந்தார். வெங்காய விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில் அதை கண்டிக்கும் விதமாக இவ்வாறு செயல்பட்டதாக அவர் கூறியுள்ளார்.