அருணாச்சலப்பிரதேசத்தில் வீரமரணமடைந்த தமிழக ராணுவ வீரர்..! 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்..!

By Manikandan S R SFirst Published Dec 13, 2019, 1:41 PM IST
Highlights

அருணாச்சல பிரதேசத்தில் நடந்த விபத்தில் மரணமடைந்த தமிழக ராணுவ வீரர் உடல் அரசு மரியாதையுடன் சொந்த கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இருக்கிறது சோளம்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் நாகராஜன். கூலித்தொழிலாளியாக பணியாற்றி வரும் இவரின் மகன் பாலமுருகன். சிறுவயதில் இருந்தே ராணுவத்தில் சேர வேண்டும் என்பதை தனது லட்சியமாக கொண்டிருக்கிறார் பாலமுருகன். அதன்படி கடந்த 2010ம் ஆண்டு ராணுவ பணியில் சேர்ந்தார்.

ராணுவத்தில் பொக்லைன் ஓட்டுநராக கடந்த 9 வருடங்களாக பாலமுருகன் பணியாற்றி வந்தார். அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் ராணுவ முகாம் ஒன்றில் வீரர்களுடன் அவர் தங்கியிருந்தார். ராணுவ முகாமினை அந்த இடத்தில இருந்து வேறொரு இடத்திற்கு மாற்றியுள்ளனர். அப்போது பாலமுருகன் சென்ற வாகனம் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு பிறகு பாலமுருகனின் உடல் தமிழகம் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி விமானம் மூலமாக பெங்களூரு கொண்டுவரப்பட்ட பாலமுருகனின் உடல் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக சோளம்பட்டி கிராமத்திற்கு வந்தது. நாட்டிற்காக சேவை ஆற்ற சென்ற மகன்,பிணமாக வந்தது கண்டு பெற்றோரும் உறவினர்களும் கதறி துடித்தனர். மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் 21 குண்டுகள் முழுங்க அரசு மரியாதையுடன் பாலமுருகனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

click me!