அமெரிக்காவில் தற்கொலை செய்துக்கொண்ட தமிழ் தம்பதி... தனியாக தவிக்கும் குழந்தையை மீட்பதில் சிக்கல்!!

By Narendran SFirst Published Mar 17, 2023, 12:09 AM IST
Highlights

அமெரிக்காவில் வசித்து வந்த மதுரை தம்பதி தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் அவர்களின் குழந்தையை இந்தியா அழைத்து வருவதில் தம்பதியின் உறவினர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் வசித்து வந்த மதுரை தம்பதி தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் அவர்களின் குழந்தையை இந்தியா அழைத்து வருவதில் தம்பதியின் உறவினர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருமாள் பட்டியை சேர்ந்த பிரவீன் என்பவரும் திருச்சி மனப்பாறையை அடுத்த கல்பட்டி பகுதியை சேர்ந்த தமிழ் செல்வி என்பவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் வசித்து வந்தனர். இவர்களுக்கு மிலன் என்ற குழந்தையும் இருந்தது.  இந்த நிலையில் இவர்கள் கடந்த ஆண்டு மே மாதம் தற்கொலை செய்துக்கொண்டனர். இதை அடுத்து அவர்களின் உடல் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர்களின் குழந்தை மிலன் அமெரிக்காவில் Missisippi department of child protection services என்ற குழந்தை பாதுகாப்பு அமைப்பிடம் இருந்தார். இதனிடையே பெற்றோரை இழந்த மிலனுக்கு உதவ அங்கிருந்த பிரவீன் தமிழ்செல்வி தம்பதி GoFundMe எனும் அமைப்பு மூலம் பக்கம் தொடங்கி அதன் மூலம் சுமார் 2.5 கோடி ரூபாயை திரட்டினர். மேலும் மிலனை தத்தெடுக்க விருப்பமுள்ளவர்கள் முன்வரலாம் என்றும் தெரிவித்திருந்தனர்.

இதையும் படிங்க: தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா... தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்!!

இதை அடுத்து மிலனை அமெரிக்காவில் இருந்த வடமாநில தம்பதியினர் தத்தெடுக்க விருப்பம் தெரிவித்தனர். அதன்படி, அவர்கள் நீதிமன்றத்தை அணுகி மிலனை தத்தெடுக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் அவர்கள் மிலனை தற்காலிகமாக தத்தெடுத்துள்ளனர். இதுஒருபுறம் இருக்க மறுபுறம் உயிரிழந்த தமிழ்செல்வின் தங்கையான அபிநயா, சிறுவன மிலனை இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார். அவருக்கு அமெரிக்காவில் மிலன் தத்தெடுக்கப்பட்ட விவகாரம் குறித்து தெரியாமல் அவர் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் மிலனை மீட்க அமெரிக்கா சென்ற போது தான் மிலன் தத்தெடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான வடமாநில தம்பதியினர், சிறுவன் மிலனை இந்தியாவுக்கு அனுப்பினால் அவனுடைய எதிர்காலமே கேள்விக்குறியாகும். தமிழகத்தில் அதாவது சிறுவனின் தாத்தா, பாட்டி இருக்கும் ஊரில் எந்த அடிப்படை வசதியும் கிடையாது. தமிழகத்தில் குழந்தை கடத்தல் பரவலாக உள்ளது.

இதையும் படிங்க: காரில் கஞ்சா கடத்திய மதுரை தம்பதி… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

இதனால் குழந்தையின் பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாகும் என்று வாதிட்டனர். இதனால் சிறுவனை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதை அடுத்து  அமெரிக்க நீதிமன்ற உத்தரவின் படி, தமிழகத்தில் ஒரு சிறப்பு குழு மிலனின் தாத்தா பாட்டியின் கிராமம் மற்றும் வீட்டிற்கு நேரடியாக சென்று அறிக்கை சமர்பித்தது. அந்த அறிக்கைக்கு, அமெரிக்காவின் MDCPS (Missisippi department of child protection services)ஒப்புதல் வழங்கியது. இருந்தபோதிலும் வடமாநில தம்பதியினர் மிலனை கொடுக்க மறுத்துவிட்டனர். இந்த விவகாரம் அயலக குடியுரிமை பெறாத தமிழர்கள் நல வாரியத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு குழந்தையை மீட்க தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்த போதிலும் வடமாநில தம்பதியினர் மிலனை கொடுக்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே குழந்தையை மீட்க அமெரிக்காவில் இருக்கும் உள்ளூர் தமிழ் அமைப்புகள் உதவ வேண்டும் என பிரவீன் மற்றும் தமிழ்செல்வியின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

click me!