விசாரணை கைதி ஒருவருக்கு இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணப்பெண்ணிடம் சம்மதம் பெற்று நீதிபதி ஜாமீன் வழங்கியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் தனக்கு ஜனவரி 30ந்தேதி திருமணம் நடக்க உள்ளதால், ஜாமின் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது "மனுதாரர் வெங்கடேஷ் மதுபாட்டில் பதுக்கி வைத்து இருந்ததாக கைதாகி, கடந்த 24 ஆம் தேதி முதல் நீதிமன்ற காவலில் கும்பகோணம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ஜனவரி 30 ஆம் தேதி திருமணம் நடக்க உள்ளது. அதனால் தனக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பாக அவரை திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண்ணிடம் தொலைபேசியில், பேசியதில், அவருக்கு சம்மதம் என தெரியவந்துள்ளது.
திருமணம் என்பது மனுதாரர் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம். எனவே அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கி உத்தரவிடப்படுகிறது' என்று நீதிபதி கூறினார். மாலை 6 மணிக்கு மேல் ஜாமீனில் யாரும் வெளியில் விடப்படுவதில்லை. ஆனால் அதில் இருந்து வெங்கடேஷிற்கு விலக்கு அளித்த நீதிபதி, அவரை ஜாமினில் வெளியில் விட வேண்டும் என்று கும்பகோணம் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Also Read: 'வாடகை கட்டிடமா.. ஆகச்சிறந்த அந்தர்பல்டியால இருக்கு'..! ஸ்டாலினை விடாது வெறுப்பேற்றும் ராமதாஸ்..!