உசிலம்பட்டி அருகே விஷம் கலந்த நீரை அருந்திய 17 ஆடுகள் பரிதாபமாக பலியாகின.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இருக்கிறது குளத்துப்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் பெருமாள். விவசாய வேலை பார்த்து வருகிறார். இவர் தனது பண்ணையில் ஆடுகளும் வளர்த்து வருகிறார். ஆடுகளை அதே ஊரைச் சேர்ந்த ஜெயப்ரகாஷ் என்பவர் தினமும் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வார். நேற்றும் வழக்கம் போல ஆடுகளை குளத்துப்பட்டி அருகே இருக்கும் காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுள்ளார்.
மேய்ச்சலுக்கு பிறகு களைப்புடன் வந்த ஆடுகள் வீட்டில் இருந்த தண்ணீரை குடித்திருக்கிறது. நீரை அருந்திய சிறிது நேரத்தில் ஒவ்வொரு ஆடுகளாக துடிதுடித்து உயிரிழந்திருக்கிறது. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஜெயப்ரகாஷ் செய்வதறியாது திகைத்தார். ஆடுகள் சுருண்டு விழுந்து துடிப்பதை அந்த வழியாக சென்ற ராமு என்பவர் கண்டு அவற்றை காப்பாற்ற முயற்சித்திருக்கிறார். அப்போது ராமு அழைத்த வந்த மாடும் ஆடுகள் குடித்த நீரை அருந்தியிருக்கிறது. இதில் மாடும் உயிரிழந்ததாக தெரிகிறது.
மொத்தம் 17 ஆடுகள் துடிதுடித்து பலியாகி இருக்கிறது. ஆடுகள் குடித்த நீரில் விஷம் கலந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வட்டாச்சியர் அலுவக அதிகாரிகளுடன் வந்து விசாரணை மேற்கொண்டனர். ஆடுகளுக்கு விஷம் வைத்து கொலை செய்த மர்மநபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விஷம் கலந்த நீரை அருந்தி 17 ஆடுகள் அடுத்தடுத்து பலியான சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.