மதுரை அருகே காயம்பட்டிருந்த நல்லபாம்பை மீட்டு பொதுமக்கள் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே இருக்கிறது முனியாண்டிபுரம் குடியிருப்பு. இங்கு ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நல்லபாம்பு ஒன்று தென்பட்டிருக்கிறது. அதைப்பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் அதை விரட்ட முற்பட்டிருக்கின்றனர். ஆனால் நல்லபாம்பு அதே இடத்தில் வெகுநேரமாக இருந்துள்ளது. இதையடுத்து அருகே சென்று பார்த்த போதுதான் நல்லபாம்பு காயப்பட்டிருந்தது தெரியவந்தது.
பலனமான காயத்தால் உயிருக்கு போராடி நகர முடியாமல் இருந்துள்ளது. அங்கிருந்தவர்கள் உடனடியாக திருநகரில் இருக்கும் ஊர்வனம் அமைப்பிற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், காயம்பட்டிருந்த நல்லபாம்பை மீட்டு கால்நடைமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பாம்பிற்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். காயம் பலமாக இருந்ததால், அறுவை சிகிச்சை செய்ய மருத்துவ குழுவினர் முடிவெடுத்தனர்.
அதற்காக பாம்பிற்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டது. இரண்டு மணிநேரமாக நடந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு பாம்பு நலம் பெற்று மீண்டும் ஊர்ந்து செல்லத் துவங்கியது. இதையடுத்து நல்லபாம்பு புதுக்கோட்டை அருகே இருக்கும் வனப்பகுதிக்கு ஊர்வனம் அமைப்பினரால் கொண்டு செல்லப்பட்டது. அங்கு காட்டுப்பகுதியில் அது பத்திரமாக விடப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: படுத்தப்படுக்கையான சோகத்தில் தற்கொலை செய்த தாய்..! அதிர்ச்சியில் மகனும் விஷமருந்தி சாவு..!