மதுரை அருகே கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் தந்தை மற்றும் மகள் இருவரும் பலியாகினர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இருக்கிறது தொட்டப்பநாயக்கனுர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் சொந்தமாக தேனீர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகள் ஹேமலதா. வயது 6.
இந்த நிலையில் இன்று வழக்கம் போல கருப்பையா தனது தேனீர் கடையில் பணியில் இருந்தார். அவரது மகள் ஹேமலதாவும் கடையில் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக கடையில் இருந்த எரிவாயு சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால் கடை மளமளவென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது. சிலிண்டர் வெடித்ததில், கடையில் வேலைபார்த்து கொண்டிருந்த கருப்பையாவும் அவரது மகள் ஹேமலதாவும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள், தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீயை அணைத்தனர். பின்னர் உயிரிழந்த கருப்பையா மற்றும் ஹேமலதாவின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.