ஒரே நாளில் ரூ.15 கோடி கல்விக்கடன்: மதுரை மாவட்டம் சாதனை - சு.வெங்கடேசன் எம்.பி. பெருமிதம்!

By Manikanda PrabuFirst Published Nov 24, 2023, 7:16 PM IST
Highlights

மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.15 கோடி கல்விக்கடன் வழங்கி இந்திய அளவில் சாதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் எம்.பி. பெருமிதம் தெரிவித்துள்ளார்.
 

மதுரை மாவட்டத்தில் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம் சு.வெங்கடேசன் எம்.பி. தலைமையில் மதுரை லேடி டோக் கல்லூரியில் நடைபெற்றது. இந்த முகாமில், ரூ.15 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இன்று நடந்து முடிந்துள்ள கல்விக்கடன் முகாம் தேசிய அளவில் பெரும் சாதனையை படைத்துள்ளதாகவும், இந்தியாவில் வேறெங்கும் இவ்வளவு தொகை ஒரே நாள் முகாமில் வழங்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை எனவும் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது தவிர இன்றைக்கு வந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு கல்விக்கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் சு.வெங்கடேசன் எம்.பி. உறுதியளித்துள்ளார்.

“கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை மதுரை மாவட்டத்தில் கல்வி கடன் கொடுப்பது 40 கோடி, 45 கோடி என்பதாக இருந்தது.  2021ஆம் ஆண்டு நாம் எடுத்த முயற்சி மதுரை மாவட்டத்தில் 118 கோடி கல்வி கடன் என்பது கொடுக்கப்பட்டது.  நூறு கோடிக்கு மேல் கல்விக்கடன் பெற்றுக்கொடுத்த முதல் மாவட்டமாக மதுரை மாவட்டம் மாறியது.” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில்15 கோடி கல்விக்கடன் வழங்கி இந்திய அளவில் சாதனை.

மாணவருக்கு கிடைக்கக்கூடிய கல்வி ஒரு நபர் சார்ந்ததல்ல, தலைமுறை சார்ந்தது.

மாணவர்களுக்கு கல்விக்கடன் கொடுக்கும் செயலில் வங்கிகள் இலகுவாக இருக்க வேண்டும். அதற்கு மதுரை முன்னுதாரனமாக அமையும். pic.twitter.com/JitPS45MfB

— Su Venkatesan MP (@SuVe4Madurai)

 

அதேபோல, “2022 ஆம் ஆண்டு பெற்றுக் கொடுத்த கல்விக்கடன் என்பது 138 கோடி ரூபாய். கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் கொடுக்கப்பட்ட கல்வி கடன் என்பது ரூ.1100 கோடி அதில் 10 சதவீதம் ரூ.138 கோடி மதுரையில் மட்டுமே பெற்று கொடுத்திருக்கின்றோம். அந்த பெருமை இங்கு உள்ள வங்கி அதிகாரிகளையும், மாவட்ட நிர்வாகத்தையும் சேரும். அவர்களுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” எனவும் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மாணவருக்கு கிடைக்கக்கூடிய கல்வி ஒரு நபர் சார்ந்த விஷயம் அல்ல ஒரு குடும்பம் சார்ந்து ஒரு தலைமுறை சார்ந்த விஷயம் என்ற அவர், மாணவர்களுக்கு கல்விக்கடன் கொடுக்கும் விஷயத்தில் வங்கிகள் இலகுவாக இருக்க வேண்டும் அந்தப் பொறுப்பை மாநில அரசும் மத்திய அரசும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் இதை தொடர்ந்து வலியுறுத்துவேன் என்றும், தொடர்ந்து அதை செய்து தர வேண்டும் என போராடுவேன் என்றும் சு.வெங்கடேசன் எம்.பி. உறுதிபட கூறினார்.

விறுவிறுவென தயாராகும் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம்!

தொடர்ந்து பேசிய அவர், “மாநிலத்திலேயே அதிக கல்விக்கடன் கொடுக்கும் முதல் மாவட்டமாக மதுரையை மாற்றி இருக்கின்றோம். நாடாளுமன்ற கல்வி நிலைக் குழுவில் இதற்காக மிகப்பெரும் போராட்டத்தை நடத்தியுள்ளோம். அதற்காக வங்கிகள் இன்றைக்கு பெரும் முயற்சிகளை எடுத்துள்ளது. அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மாவட்ட நிர்வாகத்தின் பெரும் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை. அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.

இன்றைய முகாமில், கனரா வங்கி 15 நபர்களுக்கு 4 கோடியே 51 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ரீஜனல் - 1:  12 பேருக்கு 23 லட்ச ரூபாயும். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா - ரீஜினல் - 4: ஐந்து  நபர்களுக்கு 1 கோடியே 23 லட்சத்து 3 ரூபாயும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஐந்து நபர்களுக்கு 1 கோடியே 90 லட்சத்து 38 ஆயிரம், இந்தியன் வங்கி  20 பேருக்கு 1 கோடியே 25 லட்சத்து 17 ஆயிரம் ரூபாயும். பேங்க் ஆப் இந்தியா 15 நபர்களுக்கு 92 லட்சத்து 97 ஆயிரம் ரூபாயும், பேங்க் ஆப் பரோடா எட்டு நபர்களுக்கு 2 கோடி 41 லட்சத்து 92 ஆயிரம் ரூபாயும், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆறு பேருக்கு 32 லட்சத்து 46 ஆயிரம் ரூபாயும், எச்டிஎப்சி வங்கி இரண்டு பேருக்கு 7 லட்சத்து 59 ஆயிரம் ரூபாயும், பெடரல் பேங்க் ஒரு நபருக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 14 கோடியே 55 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் கல்வி கடனாக 115 மாணவர்களுக்கு வழங்கியுள்ளன.

click me!