சட்டத்திற்கு புறம்பாக பண வசூலில் ஈடுபட்ட மூன்று காவலர்களுக்கு கட்டாய ஓய்வளித்து மதுரை மாநகர காவல்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
காவல்துறை சார்பாக சாலைகளில் வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம், ஓட்டுநர் உரிமம் போன்றவை முறையாக இருக்கிறதா என்று சோதனை மேற்கொள்ளப்படும். வாகன விதிமுறைகளை மீறியிருந்தால் அபராதம் விதிக்கப்படுவது வழக்கம். அது போன்ற நேரங்களில் சில காவலர்கள் வாகன ஓட்டிகளிடம் லஞ்சமாக சிறிது பணத்தை பெற்று கொண்டு அனுப்பி விடுவர் . இது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் பண வசூலில் ஈடுபட்டதற்காக மதுரையில் மூன்று காவலர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது.
மதுரை மாநகர் பகுதியில் காவல்துறை கிரேட் ஒன் காவலராக வேலை பார்த்து வந்தவர்கள் செந்தில்குமார், பாலமுருகன் மற்றும் இளங்கோவன். இவர்கள் மூவரும் கடந்த 2017ம் ஆண்டு மதுரை நகரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியாக வந்த வாகன ஓட்டிகளிடம் விதிகளை மீறி இவர்கள் மூவரும் பணம் வசூல் செய்திருக்கின்றனர். இதுதொடர்பாக காவல்துறைக்கு பொதுமக்கள் சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த புகார் குறித்து சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது காவல்துறை அதிகாரிகள் சார்பாக துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அந்த விசாரணையின் முடிவில் மூன்று காவலர்களும் சட்டத்திற்கு புறம்பாக வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்தது நிரூபணம் ஆனது. இதைத்தொடர்ந்து மதுரை மாநகர காவல்துறை கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பண வசூலில் ஈடுபட்ட காவலர்கள் செந்தில்குமார், பாலமுருகன் மற்றும் இளங்கோவன் ஆகிய 3 பேரையும் கட்டாய ஓய்வில் செல்லுமாறு உத்தரவிட்டிருக்கிறார்.
பண வசூலில் ஈடுபட்டதற்காக கட்டாய ஓய்வளித்த நடவடிக்கை காவல் துறையினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.