வைகை கரைக்கு வரமாட்டார் கள்ளழகர்..! மனம் கலங்கிய மதுரை மக்கள்..!

By Manikandan S R SFirst Published Apr 26, 2020, 10:49 AM IST
Highlights

இந்தியாவில் ஊரடங்கு மே 3ம் தேதி வரை அமலில் இருக்கும் நிலையில், லட்சக்கணக்கான மக்கள் கூடும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் கொரோனா வைரஸ் நோயின் தீவிரம் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 26,496 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 824 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக மக்கள் சமூகவிலகலை கடைபிடிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் அமலில் இருந்த 21 நாட்கள் ஊரடங்கு மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி மே 3ம் தேதி வரை இந்தியாவில் தேசிய ஊரடங்கு அமலில் இருக்கும்.  ஊரடங்கு காலத்தில் கடைகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், பொது போக்குவரத்து, முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் ஒன்றாக திரள்வதற்கு அரசு தடை விதித்திருக்கிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் நடைபெற இருந்த பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் போன்றவை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அதன்படி தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்தியாவில் ஊரடங்கு மே 3ம் தேதி வரை அமலில் இருக்கும் நிலையில், லட்சக்கணக்கான மக்கள் கூடும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான மண்டூக ரிஷிக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சியும் புராணம் வாசித்தல் நிகழ்ச்சியும் மட்டும் கோவிலில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில் விழாவை இணையதளம் மூலமாக நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவும் ரத்து செய்யப்பட்டு திருக்கல்யாணம் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தொழுகைகளுக்கு ஒன்று கூட கூடாது..! கடும் கட்டுப்பாடுகளுடன் தொடங்கிய ரமலான் நோன்பு..!

ஊரடங்கு மே 3ம் தேதி முடிவடைவதால் மதுரை சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெறும் என்று மதுரை மக்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பதால் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டு இருப்பது, ஊரடங்கு முடிந்த பின்னரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடரும் என்பதை உணர்த்துவதாக இருக்கிறது. பன்னெடுங்காலமாக தடைபடாமல் நடந்து வந்த கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ரத்தாகி இருப்பது மதுரை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

click me!