கொரோனாவால் இறந்தவர்களை என் நிலத்தில் அடக்கம் செய்யலாம்..! பிரதமருக்கு கடிதம் எழுதிய மதுரை மாணவி..!

By Manikandan S R SFirst Published Apr 25, 2020, 3:53 PM IST
Highlights

எனது தந்தை சிறு குறு விவசாயி. எங்களுக்கு 3 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் கொரோனா சிகிச்சைக்கு பணிபுரிந்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், ஊடகத்துறையினர், துப்புரவு பணியாளர்கள் யாராவது நோய் தொற்று ஏற்பட்டு மரணமடைந்தால் அவர்களின் உடலை எங்கள் நிலத்தில் அடக்கம் செய்ய எனது தந்தை, தாயாரின் ஒப்புதலின்பேரில் சம்மதம் தெரிவித்து பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டு மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களால் தீவிரமாக பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அண்மையில் சென்னையில் மருத்துவர் ஒருவர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து தொற்று ஏற்பட்டு பலியாகி விட அவரது உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்தன.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்ய எதிர்ப்பு நிலவினால் தனது கல்லூரியின் ஒரு பகுதியில் உடல்களை அடக்கம் செய்யலாம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்தார். அதேபோல பல தன்னார்வலர்கள் தங்கள் நிலங்களில் உடல்களை அடக்கம் செய்ய பெருந்தன்மையோடு முன்வந்தனர். அந்த வகையில் தற்போது மதுரை மாவட்டத்தில் மாணவி ஒருவர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் உயிரிழந்தால் தங்கள் நிலத்தில் அடக்கம் செய்யலாம் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே இருக்கும்  கச்சைகட்டியைச் சேர்ந்த பாரதிதாசன் என்பவரின் மகள் தென்னரசி. அங்கிருக்கும் ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கொரோனா நோய்க்கு சிகிச்சை அளித்து உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்திகள் கண்டு மனம் வருந்திய அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

அதில், அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்நோயிலிருந்து நாட்டுமக்களை காப்பாற்ற தாங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்பு பாராட்டி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வார்டில் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் இரவும் பகலும் பாடுபடும் மருத்துவர்கள் மனவேதனையில் உள்ளனர். எனது தந்தை சிறு குறு விவசாயி. எங்களுக்கு 3 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் கொரோனா சிகிச்சைக்கு பணிபுரிந்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், ஊடகத்துறையினர், துப்புரவு பணியாளர்கள் யாராவது நோய் தொற்று ஏற்பட்டு மரணமடைந்தால் அவர்களின் உடலை எங்கள் நிலத்தில் அடக்கம் செய்ய எனது தந்தை, தாயாரின் ஒப்புதலின்பேரில் சம்மதம் தெரிவித்து பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கூறியிருக்கும் அவர், நமது பாதுகாப்பிற்காக பணியாற்றுபவர்களுக்கு நாம் தான் உதவ வேண்டும் என்பதால் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் வைரஸ் பாதித்து இறந்தால் அடக்கம் செய்ய தங்கள் இடத்தை தரலாமே என தந்தையிடம் கேட்டதாக கூறியிருக்கிறார். அவரும் சம்மதிக்கவே பிரதமருக்கு கடிதம் எழுதியாக சிறுமி குறிப்பிட்டிருக்கிறார். சிறுமியின் இந்த மனிதாபிமானமிக்க செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவித்து வருகின்றனர்.

click me!