இன்னும் ஓரிரு நாட்களில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. அப்படி நடந்தால் மதுரை மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள் என்பது உறுதி.
கொரோனா ஊரடங்கால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை விழாவை ரத்து செய்து விட்டார்கள். இதுவரை, ஒரு வருடம் கூட, சித்திரை திருவிழா ரத்தானதே இல்லை. ஒரு முறை விழாவுக்கு தடை விழுந்துவிட்டால் அடுத்து, மூன்று ஆண்டுகளுக்கு விழாவை நடத்த முடியாமல் போட்விடும் என பலரும் அஞ்சுகின்றனர். அதுமட்டுமின்றி அழகர் வைகை ஆற்றில் இறங்காமல் போய்விட்டால் மழை, தண்ணீர் இல்லாமல் பஞ்சம் தலைவிரித்தாடும் என பக்தர்கள் புலம்பி வருகிறார்கள். ஆகையால், 'சம்பிரதாயத்துக்காவது, சித்திரை திருவிழா, அழகர் ஆற்றில் இறங்கும் விழாவை நடத்த வேண்டும் என மதுரை பகுதி மக்களும், கோயில் நிர்வாகமும் அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறது.
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் இந்த ஆண்டுக்கான திருவிழா மீனாட்சி கோயிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி இருக்க வேண்டும். ஊரடங்கு மே 3-ம் தேதி வரை அமலில் உள்ளது. கள்ளழகர் கோயில் முக்கிய திருவிழா அன்றுதான் தொடங்குகிறது. மே 3, 4-ல் கோயில் வளாகத்திலேயே கள்ளழகர் உலா வருவார். மே 5 மாலை மதுரைக்குப் புறப்படுவார். மே 6-ல் எதிர்சேவை, மே 7-ல் முக்கிய நி்கழ்வான வைகை ஆற்றில் எழுந்தருளல் நடக்கும். மே 8-ல் மண்டூக மகரிஷிக்கு சாபம் தீர்ப்பார். ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது தெரியாத நிலையில், அழகர் ஆற்றில் இறங்குவாரா என்பது பெரும் கேள்விக் குறியாக உள்ளது.
undefined
பொதுவாக சித்திரை திருவிழாவை காண 10 லட்சம் மக்கள் கூடுவார்கள். இந்த ஆண்டு மக்கள் கூடாமல், திருவிழாவை மட்டும் பட்டர்களை வைத்து காவல்துறை பாதுகாப்புடன் ஆற்றில் இறங்கும் வைபவத்தை நடத்தியே ஆக வேண்டும். எத்தனையொ விஷயங்களில் ஊரடங்கில் இருந்து தளர்வு கொடுக்கும் அரசு பல லட்சம் மக்களின் நம்பிக்கையான இந்த திருவிழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் என மதுரை மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக பலரும் அரசுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பி விட்டு அனுமதிக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பாக வழக்கறிஞர் கலைமணி நம்பிடம், ‘’கடந்த 17 -04 -2020 அன்று தமிழக இந்து அறநிலைய துறை அறிவிப்பில் திருவிழா ரத்து என்ற செய்தி வெளியாகி பின்னர் திருக்கல்யாண வைபோகம் மட்டும் அரசு எடுக்கும் விதிமுறை நெறிமுறைகளோடு நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த மறு அறிவிப்பு உலக தமிழர்களிடையே மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திருக்கல்யாண வைபவத்தை அரசே தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்வதால் பக்தர்கள் தங்கள் வீட்டில் இருந்தே பார்த்து அவர்களுடைய பிராத்தனைகளை செய்து கொள்வார்கள்.
அதே போன்று அருள்மிகு ஸ்ரீகள்ளழகர் திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வையும் தமிழக அரசு விதிமுறைக்கு உட்பட்டு நடத்த வேண்டும். இந்த வைபவத்தையும் அரசே தொலைக்காட்சி மூலம் பக்தர்கள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தடைபடாமல் ஆண்டாண்டு காலமாக நடைபெற்ற இந்த திருவிழா இந்த வருடமும் நடந்தேறினால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள்’’ எனக்கூறுகிறார். தற்போதைய நிலவரப்படி, சில கட்டுப்பாடுகளுடன் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவை அரசு நடத்த வேண்டும் என பரிசீலித்து வருவதாக அரசு தரப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.
வழக்கறிஞர் கலைமணி
இன்னும் ஓரிரு நாட்களில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. அப்படி நடந்தால் மதுரை மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள் என்பது உறுதி. இல்லையேல், இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்கு மதுரை பகுதி மக்கள் நிம்மதி இழந்து பதற்றத்துடனே ஒவ்வொரு நாளையும் கடக்க வேண்டிய சூழல் உருவாகும் என்கிறார்கள். இது மக்களுக்கான அரசு. ஆகையால், உரிய வகையில் நடவடிக்கைகளை எடுத்து சித்திரை திருவிழா நடத்த அனுமதி வழங்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் மதுரை சுற்றுவட்டாரப்பகுதி மக்கள்.