தமிழகத்தில் அடுத்த கொரோனா பலி..! மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகரின் தாய் மரணம்..!

By Manikandan S R S  |  First Published Apr 24, 2020, 8:24 AM IST

 மதுரையில் 72 வயது மூதாட்டி கொரோனா தொற்றுக்கு பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


இந்திய அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,683 ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு தமிழகத்திலும் மிகக்கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.

Tap to resize

Latest Videos

இதனிடையே மதுரையில் 72 வயது மூதாட்டி கொரோனா தொற்றுக்கு பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரையில் இருக்கும் தானப்ப முதலியார் தெருவை சேர்ந்த மீனாட்சி அம்மன் கோவிலின் அர்ச்சகரின் 72 வயது தாய்க்கு அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்த அவரை பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தனிமை சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் தீவிர கண்காணிப்பில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் மரணமடந்தார். இதையடுத்து மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர் குடும்பத்தினர், கோவில் ஊழியர்கள், கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார் என அனைவரையும் சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தியுள்ளனர்.

கோவில் அர்ச்சகர் அண்மையில் வெளிநாடு சென்று வந்ததாகவும் அவர் மூலமாகவே கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும் என கூறப்படுகிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு அர்ச்சகரின் தாய் வெளியே எங்கும் செல்லவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. அர்ச்சகரின் வீட்டிற்கு தினமும் வேலையாள் ஒருவர் வந்து சென்ற நிலையில் அவரையும் அவரோடு தொடர்பில் இருந்தவர்களையும் சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி பரிசோதித்து வருகின்றனர். உயிரிழந்த அர்ச்சகரின் தாய்க்கு அரசு விதிகளின்படி இறுதிச்சடங்குகள் நடத்த இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மதுரையில் 54 வயது முதியவர் கொரோனாவிற்கு பலியானது குறிப்பிடத்தக்கது.

click me!