தடுப்பூசி, வெண்டிலேட்டர், ஆக்ஸிஜன் தட்டுப்பாடுகள் குறித்தும், ஊரடங்கு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும், தளர்வுகள் கோரியும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. தடுப்பூசி, வெண்டிலேட்டர், ஆக்ஸிஜன் தட்டுப்பாடுகள் குறித்தும், ஊரடங்கு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும், தளர்வுகள் கோரியும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. மதுரையைச் சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக 1.5 லட்சத்திற்கு மேற்பட்ட நபர்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது உருமாறிய கொரோனா நோய்த்தொற்று இந்தியா முழுவதும் பரவி வருகிறது. கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு தற்போது மத்திய அரசின் உத்தரவின்பேரில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 135 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால், ஏழை எளிய மக்கள் பயன்பெற முடியாத நிலை உள்ளது. அரசுத் தரப்பில் இலவசமாக போடப்படும் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு தற்போதுவரை போடப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எனவே, போர்க்கால அடிப்படையில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசியைபோட ஏற்பாடு செய்யவும், தனியார் மருத்துவமனையில் போடப்படும் கொரோனா தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் செய்தும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக சுகாதாரத் துறையின் இயக்குனர் தரப்பில், " 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் என பல கட்டங்களாக கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொறுத்தவரை, பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை பரவாயில்லை. அரசும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது’’ எனக்கூறி வழக்கை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.