மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள ஆந்திரா வங்கியில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் தொற்றின் வேகம் அதிகரித்து வருவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, கோவையைக் கடந்து மதுரையில் கடந்த சில நாட்களாகவே தொற்றின் வேகம் தீவிரமடைந்து வருகிறது.
undefined
நேற்றைய நிலவரப்படி மதுரையில் 83 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதில் 58 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 364 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மீண்டு 15 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 188 ஆக அதிகரித்துள்ளது.
மதுரையில் தீவிரமடைந்து வரும் கொரோனா தொற்றின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பிக்கப்பட்டுள்ளார். அதன் படி கொரோனா தொற்று அதிகமுள்ள தெருக்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியின் நடவடிக்கையின் படி இன்று மட்டும் பல்லவி நகர், திருப்பாலை, கே.கே.நகர், விளாங்குடி, வில்லாபுரம் உள்ளிட்ட 18 தெருக்கள் அடைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள ஆந்திரா வங்கியில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்துவதற்காக வங்கி 3 நாட்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை வங்கி வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள கிளைகளை பயன்படுத்திக்கொள்ள வங்கி மேலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.