அமைச்சர் மூர்த்தியின் சொந்த தொகுதியில் கண்மாயை காணவில்லை; பொதுமக்கள் குற்றச்சாட்டு

By Velmurugan s  |  First Published Feb 16, 2023, 12:09 PM IST

அமைச்சர் மூர்த்தியின் தொகுதியில் கண்மாயை காணவில்லை என கூறி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெள்ளியங்குன்றம் பகுதியில் உள்ளது வெ.அழகாபுரி கிராமம். இந்த கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இந்த கிராமத்தில் 3.5ஏக்கர் பரப்பளவில் அழகாபுரி கண்மாய் இருந்துள்ளது. ஆனால் இந்த கண்மாய் மற்றும் கண்மாய்க்கு செல்லும் வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தற்போது முழுமையாக கண்மாய் என்பதே இல்லாத நிலையில் உள்ளது. 

இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அளித்தபோது கண்மாய் இருந்ததற்கான ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த கண்மாய் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு பிளாட்கள் விற்பனை செய்வதற்கான அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் கிராம மக்கள் பாதிக்கப்பட்டு கண்மாய் ஆக்கிரமிப்பால் நிலத்தடி நீர் குறைந்து காணப்படுவதோடு எந்தவித அடிப்படை வசதிகள் இன்றியும் வாழ்ந்துவருவதாகவும் , காணாமல் போன கண்மாயை மீட்டுதருமாறு இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள்  நேரில் வந்து புகார் மனு அளித்தனர்.

Latest Videos

undefined

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கிராம மக்கள்: காணாமல் போன அழகாபுரி கண்மாயை கண்டுபிடித்து தர வேண்டும், அழகாபுரி கிராம பொது பயன்பாட்டிற்கு தண்ணீர் தொட்டி, நாடகமேடை மற்றும் அழகாபுரி கிராம பொதுத் தேவைக்கு பயன்படுத்த ஆக்கிரமைப்பை அகற்றி கிராமத்திற்கு தர வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

தங்களது கிராமத்திற்கு குடிநீர், கழிப்பிடம், அங்கன்வாடி, ரேசன்கடை உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாத நிலையில் சிட்டிசன் படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமம் போல மாறிவிட்டதாகவும் தெரிவித்தனர். அமைச்சரின் சொந்த தொகுதியிலேயே அடிப்படை வசதிகள் இன்றி கிராம மக்கள் இருப்பதாகவும், கண்மாய் காணாமல் போனதாகவும் கிராமத்தினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

click me!