மதுரையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நத்தம் பறக்கும் பால சாலையில் இளைஞர்கள் மது போதையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதால் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் அந்த பாலத்தை பயன்படுத்தவே அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ரூ.612 கோடியில் மதுரை, நத்தம் பறக்கும் பால சாலை நாள்தோறும் இன்ஸ்டா அலைப்பறைகளின் ஸ்பாட்டாக மாறி வருகிறது. பறக்கும் பால சாலையில் கையை பிடிக்காமலே ஸ்டண்ட் செய்வது. இரவு நேரங்களில் கார் ரேஸ், பைக் ரேஸ் என நாள் தோறும் சமூகவலைதளங்களின் லைக்குகளுக்காக மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் காவல்துறை ரோந்து வாகனம் சென்ற பின்னர் பறக்கும் பாலத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் இளைஞர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் இரவு தொடங்கினாலே நத்தம் பறக்கும் பாலத்தை பயன்படுத்த அச்சமடைகின்றனர். மேலும் சில நேரங்களில் நத்தம் பறக்கும் பாலத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் வாகனங்களில் தனியாக செல்பவர்களிடம் வழிப்பறியில் ஈடுபடும் சம்பவமும் அரங்கேறிவருகிறது.
undefined
ரூ.612 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பறக்கும் பாலத்தில் இரவு நேரத்தில் அச்சமின்றி பயணிக்க முடியாத சூழல் உருவாகி மதுபோதைவாசிகளின் பொழுதுபோக்கும் இடமாக மாறிவருகிறது. இந்நிலையில் மதுபோதையில் கையில் மதுபாட்டில்களுடன் இளைஞர் கும்பல் ஒன்று நத்தம் பறக்கும் பால சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் ஏறி நின்றபடி மதுபோதையில் அலப்பறை செய்வது போல போனில் இன்ஸ்டா சூட்டிங் பதிவு செய்யும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகவலைதளவாசிகள் காவல்துறையினருக்கு கோரிக்கை எழுப்பி வருகின்றனர். காவல்துறை ரோந்து வாகனம் சென்று திரும்பும் நேரங்களை அறிந்துகொண்டு அந்த நேரங்களில் காவல்துறையினருக்கே டிமிக்கி கொடுத்துவிட்டு இது போன்று இன்ஸ்டா அலப்பறைகள் மதுபோதையில் சூட்டிங் நடத்திவிட்டு தப்பிவிடுகின்றனர்.
இதன் உச்சகட்டமாக இது போன்ற வீடியோக்களை எவ்வித அச்சமும் இன்றி பதிவிட்டும் வருகின்றனர். மக்கள் பயன்பாட்டிற்கான சாலைகளை தங்களின் அட்ராசிட்டி விளம்பரங்களுக்கான பகுதிகளாக மாற்றிவரும் நபர்களின் மீது பாரபட்சமின்றி காவல்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பறக்கும் பாலத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சிசிடிவி கேமிராக்களின் எண்ணிக்கையை அதிகரித்து கண்காணிப்பை தீவிரப்படுத்தினால் மட்டுமே இரவு நேரங்களில் நத்தம் பறக்கும் பாலம் மக்களின் பயன்பாட்டிற்கானதாக மாறும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.